அன்னா ஹசாரேவுக்கு நாடு முழுக்க ஆதரவு பெருகி வருகிறது: பிருந்தா காரத்
நீலகிரி: நாட்டில் உள்ள ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நீலகிரி மாவட்ட மாவட்டச் செயலாளர் பத்ரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியதாவது, தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் பணமுதலைகளுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மாற்ற வேண்டும்.
யானை வழித்தடத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்களால் வன விலங்குகளுக்கும், இயற்கைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இந்தப் பிரச்சனையில் ஆதிவாசிகளை வெளியேற்றுவது சரியல்ல. தேயிலை பிரச்சனையில் இடைத்தரகர்கள் தான் லாபம் அடைகின்றனர்.
விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே, பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது.
தற்போது நடைபெறும் மத்திய அரசு போல் ஒரு ஊழல் அரசை இதுவரை பார்த்ததே இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் நாள்தோறும் ஒன்வொன்றாக தற்போது வெளிவர துவங்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக மக்களின் போராடுவதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால், போராட்டம் வளர்ந்து கொண்டே வருகிறது.
ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே இருந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. மத்திய அரசு புதிய லோக்பால் மசோதாவை திரும்ப பெற வேண்டும் அல்லது திருத்தம் செய்து தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு பிருந்தா காரத் கூறினார்.












Click it and Unblock the Notifications