'திமுக ஆட்சி கழக ஆட்சி அல்ல, கமிஷன் ஆட்சி'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சென்னை: கடந்த திமுக ஆட்சியில் மக்களுக்காக திட்டங்களைக் கொண்டு வராமல், கமிஷனுக்காகத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள சிறைகள் மட்டுமல்ல, திகார் சிறையும் திமுகவினரால் நிரம்பி வழிகிறது. போகிறப்போக்கை பார்த்தால் திமுகவினருக்காக புதிய சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும் போலிருக்கிறது.
திமுக ஆட்சியை கழக ஆட்சி என்று அடிக்கடி கருணாநிதி கூறுவார். அது கழக ஆட்சி அல்ல. கமிஷன் ஆட்சி. கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடந்தாலும் அவர்களுக்கு கொள்ளைக் களமாக அமைந்தது நெடுஞ்சாலைத் துறைதான்.
திமுக ஆட்சியில் மக்களுக்காகத் திட்டங்களைக் கொண்டு வராமல், திமுகவினர் சம்பாதிப்பதற்காக கமிஷன்களுக்காகவே திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சாலைகள், பாலங்கள் அமைப்பதில் 40 முதல் 50 சதவீதம் வரை கமிஷன் பெற்றுள்ளனர்.
சாலையோரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான புளியமரங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அதையும், கண்ணில் அகப்பட்டதை எல்லாம் சுருட்டிக் கொண்டனர்.
அரசின் கட்டுமானப் பணிகள் பொதுப்பணித் துறை மூலம் நடக்கிறது. கட்டுமானப் பணிகளுக்கென தனியாக துறை ஏற்படுத்த வேண்டும் என்றார் பாலகிருஷ்ணன்.
வீட்டு வசதி வாரியத்தில் பல கோடி ஊழல்-அமைச்சர்:
முன்னதாக வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசிய அந்தத் துறையின் அமைச்சர் வைத்திலிங்கம்,
இந்த வாரியத்தின் மூலம் அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் 1 லட்சத்து 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. திமுக ஆட்சியில் 73 ஆயிரத்து 526 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் திமுகவினர் ஊழல், கொள்ளை கோடிக்கணக்கில் நடைபெற்றது. உதாரணத்துக்கு சில சம்பவங்களை மட்டும் கூறுகிறேன். சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் 21 கிரவுண்டு 186 சதுர அடி நிலத்தை வாரியம் 2004-ம் ஆண்டில் ஏலம் விட்டது. ஏலம் எடுக்க வந்த 32 பேரை தடுத்து நிறுத்தி ரமேஷ் என்பவருக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
ஆனால் நினைத்த தொகை வரவில்லை என்பதால் அந்த ஏலத்தை வாரியம் நிறுத்தியது. அதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பின்னர் திமுக ஆட்சி வந்ததும் அந்த 21 கிரவுண்ட் நிலமும் ரூ.4.16 கோடிக்கு ரமேஷ்க்கு தரப்பட்டது.
இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜிடம் ரமேஷ் விற்பனை செய்தார். இந்த நிலத்தை விலை குறைத்து ரமேஷுக்கு கொடுத்ததால், அரசுக்கு ரூ.15 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
போலீஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு பெசன்ட்நகர், திருவான்மிiர் காமராஜர் திட்டப் பகுதியில் மனை அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவின் கீழ் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. தன் பெயரிலிருந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு அவரது மகள் பெயரில் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீண்டும் அந்த மனையை ரத்து செய்து அவருடைய மனைவி பர்வீன் பெயரில் சமூக சேவகர் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் இந்த மனையை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாரியத்திடம் திரும்ப ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதை வாரியம் ஏற்கவில்லை. வீட்டுவசதி வாரிய சட்டப்படி ஒரு முறை ஒதுக்கீடு பெற்றவர் மீண்டும் ஒதுக்கீடு பெறக்கூடாது. விதிகளை மீறி சமூக சேவகர் என்ற அடிப்படையின் கீழ் ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் பெயரில் முறைகேடாக ஒதுக்கீடு பெற்றுள்ளார். மீண்டும் அம்மா ஆட்சிதான் வருகிறது என்பது தெரிந்ததும், அதை கருணாநிதிக்கும் தெரிவிக்காமல், மனையை அவர் ஒப்படைத்திருக்கிறார்.
அடுத்ததாக, வீட்டுவசதி வாரியத்தின் திமுக தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் பூச்சி முருகன். இவரது மாத சம்பளம் வெறும் ரூ.6,000. இவர் சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் உயர் வருவாய் பிரிவு மனை திருவான்மியூரில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ.60 லட்சத்தை 60 தவணைகளாக செலுத்துவதற்கு பதிலாக இரண்டரை மாதத்தில் செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுவிட்டார். ஆனால், இவர் வருமான வரியே செலுத்தவில்லை.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ். இவருக்கு கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான 50.30 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து சிலர் லீமா ரோசுக்கு பவர் கொடுத்து விற்பனை செய்துள்ளார்கள். அதை அவர் தெரிந்தே வாங்கியுள்ளார். அதன் சந்தை மதிப்பு ரூ.30 கோடி. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.30 கோடியாகும்.
இதுபோன்ற முறைகேடுகள் கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நிலமோசடி நடந்துள்ளது. இன்னும் இதுபோன்ற தவறு செய்தவர்களை விரைவில் கண்டுபிடிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications