சிவகாசியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன் திடீர் கண்டுபிடிப்பு-மக்கள் சந்தேகம்!
சிவகாசி: சிவகாசியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரின் மகன் காணாமல் போன விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ஒரு நாடகமாக இருக்குமோ என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.
மக்கள் சந்தேகம் கிளப்பக் காரணம், சிறுவனின் தந்தை குறித்து அப்பகுதி மக்களிடையே நி்லவும் கருத்துக்கள்தான்.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல், எஸ்.என்.புரம், சிவாஜிநகரை சேர்ந்தவர் ரமேஷ்பாண்டியன் (40). இவர் அதிமுக பிரமுகர். சிவகாசி ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளராக இருக்கிறார்.
இவர் கடந்த 30ம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற கோடீஸ்வரன் இரவு வரை வீடு திரும்பவில்லை என்று திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சிறுவனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் பாண்டியன் செல்போனுக்கு ஒரு போன் வந்ததாகவும், அதில் பேசியவர்கள் இந்தியில் பேசி பணம் கேட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் திண்டுக்கலில் நான்கு பேர் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் திடீரென சிறுவன் கோடீஸ்வரன் ஊர் திரும்பினான். தான் திருச்செந்தூரில் செந்தில்பாலாஜி ஹோட்டலில் வேலை செய்ததாகவும், அங்கு டிவி மற்றும் தினசரிகளில் தன்னைக் காணவில்லை என்ற செய்தியைப் பார்த்துத் திரும்பியதாகவும் கூறியுள்ளான் கோடீஸ்வரன்.
இதனால் குழப்பம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் வேறு மாதிரியாக கூறுகிறார்கள். கோடீஸ்வரன் அடிக்கடி வீட்டை விட்டு போய் விடுவான். பிறகு அவனாகவே திரும்பி விடுவான். அவனது தந்தையும் பெரும் விளம்பரப் பிரியர். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவர் முயன்று வருகிறார். மக்கள் அனுதாபத்தைப் பெற கடத்தல் என்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார் என்கிறார்கள்.
சிறுவன் பத்திரமாக திரும்பி விட்டாலும் அவன் கடத்தப்பட்டானா அல்லது அவனாகவே வீட்டை விட்டுப் போய் திரும்பி வந்தானா என்பது தெரியவில்லை. தொடர்ந்து குழப்பமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications