தூத்துக்குடியில் 20 நாட்களுக்குப் பிறகு விசைப்படகு ஸ்டிரைக் வாபஸ்: மீனவர்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 20 நாட்களாக நடந்து வந்த விசைப்படகுகளின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 29-ம் தேதி வீசிய சூறைக்காற்றால் கடலுக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் விசைப்படகுகள் துறைமுகத்திற்கு திரும்பின. விசைப்படகு உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் எதிரொலியாக தூத்துக்குடியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரைநிறுத்தம் செய்யப்பட்டன.
இதனால் விசைப்படகு உரிமையாளர்கள், சார்பு தொழிலாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன் விசைப்படகு தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களது உறவினர்கள், சக தொழிலாளர்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனாலும் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
இப்பிரச்சனையில் கலெக்டர் ஆசிஷ்குமார், பனியமாதா ஆலய பங்குதந்தை ஆகியோர் தலையிட்டு இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் ஆலோசனையை விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருவரும் ஏற்றுக கொண்டனர். இதனையடுத்து இரு தரப்பினரும் கடலுக்கு செல்ல முடிவு செய்து உறுதியளித்தனர்.
இதனால் 20 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று (19-ம் தேதி) காலை முதல் விசைப்படகுகள் வழக்கம் போல் மீண்டும் கடலுக்கு செல்கின்றன. ஏற்கனவே கடந்த 20 நாட்களாக வேலைநிறுத்தம் நீடித்து வந்ததால் நாள் ஒன்றுக்கு ரூ.1.20 லட்சம் வீதம் சுமார் ரூ. 2.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரத்து அறவே நின்று மீன்களின் விலை கடுமயாக உயர்ந்தது. 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மீண்டும் கடலுக்கு செல்வதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications