கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம்- ஜெ. தலைமையில் அமைச்சரவை தீர்மானம்
சென்னை: மக்களின் அச்சத்தைத் தீர்க்கும் வகையில் கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் வலியுறுத்துவது என்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடந்த 19-ந் தேதி ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், இந்த பிரச்சினையில் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, பிரதமரை சந்தித்து, ஒரு கோரிக்கை மனுவை அளிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு எட்டப்படும் வரையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக்கொண்டார்.
அந்த கடிதத்தை படித்த பின், பிரதமர் மன்மோகன்சிங் முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
அதனையடுத்து, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி 20-ந் தேதி தமிழகம் வந்து தலைமைச் செயலாளரை சந்தித்த பின், இடிந்தகரை சென்று, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சந்தித்தார். அப்போது இடிந்தகரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை தான் சந்தித்தது பற்றி முதல்வரிடம் எடுத்துக்கூறினார். இந்த சந்திப்பின்போது, இந்திய அணுமின் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.கே.ஜெயின், மத்திய அரசு அணுசக்தி துறையின் கூடுதல் செயலாளர் ஏ.பி.ஜோஷி, கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் ஆ.காசிநாத் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
முதல்வர் ஜெயலலிதா அந்த கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டப்படும் என்றும், கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகளை மேற்கொண்டு தொடர வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நியூயார்க்கிலிருந்து வரும் 27-ந் தேதி திரும்பிய பிறகு, அவரை சந்திப்பதற்கு வசதியான நாளைப் பெற்று, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக குழு டெல்லிக்கு சென்று, பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கும் என்றும், பிரதமர் இந்தியா திரும்பிய பின், பிரதமருடன் முதல்வர் தொலைபேசியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப, தற்போது இடிந்தகரையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தை உடனடியாக கைவிடுவதாக போராட்ட குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முதல்வரின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் அணு மின் நிலையப் பணிகளை, மக்களின் அச்சம் தீரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசையும், பிரதமரையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், கூடங்குளம் அணு மின்நிலையம் தொடர்பாக மத்திய அரசை சந்திப்பதற்கு ஒரு குழுவை அமைத்தல், மக்கள் அச்சம் நீங் கும்வரை அணு மின்நிலைய பணிகள் நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, பிரதமரை சந்திக்கக் குழு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன












Click it and Unblock the Notifications