மாவோயி்ஸ்டுகள் என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு
கொல்கத்தா: மாவோயிஸ்டுகள் என்னையும், மத்திய அமைச்சர் முகுல் ரால் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை கொல்ல முயற்சி செய்கின்றனர் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் என் வீட்டின் அருகில் சுற்றிக் கொண்டிருந்தனர். மத்திய அமைசச்ர் முகுல் ராய், எனது கட்சி தலைவர் ஸ்ரீகந்தா மகதோ ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அண்மையில் அவர்கள் நடத்திய பேரணியில் கூட திரிணாமுல் தலைவர்களுக்கு குறிவைத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இனி மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை. மாவோயிஸ்ட்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் தீர்வு காணத் தான் விரும்பினோம். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் முயற்சி செய்தால், அவர்கள் அதற்கு ஒத்துழைப்பது இல்லை. அதனால் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.
மாவோயிசம் என்ற பெயரில் மற்ற கட்சித் தலைவர்களை கொன்று குவித்துள்ளனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் உள்ள ஜங்கிள்மஹால் மக்களுக்கு உணவு, வேலை அளிக்க விரும்புகிறோம். அதற்கு ஏன் அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களுக்கு ஏழைகள் மீது அக்கறை இல்லை.
அவர்களின் அமைப்பு உலகம் முழுவதும் பரவியுள்ளது. திரிணாமுல் கட்சிக்காரர்களை கொன்று என்னை பணிய வைக்க முடியாது. மக்களை தவறான வழியில் அழைத்துச் செல்பவர்களை எதிர்த்து அமைதியாகப் போராடுவோம்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆகியவற்றில் மாவோயிஸ்டுகளுக்கு ஆட்கள் உள்ளனர். மாணவர்களே உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மாவோயிஸ்ட்களை விட்டு விலகுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications