ஒரு நாள் போலீஸ் காவலில் கே.என்.நேரு-ராமஜெயம்: வாக்குமூலம் வீடியோவில் பதிவு

Subscribe to Oneindia Tamil

KN Nehru
திருச்சி: ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் மிரட்டி அபகரிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, துணை மேயர் அன்பழகன் மற்றும் நேரிவின் தம்பி ராமஜெயம் ஆகியோரை இன்று போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் கொல்லாம்பாளையத்தை சேர்ந்த கருணாநிதி மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் 9.33 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கருணாநிதி தனது மூத்த சகோதரிகளின் கணவர்கள் நாகராஜ், காமராஜ் ஆகியோர் பராமரிப்பில் விட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு கே.என்.நேரு, அவரது தம்பி கே.என்.ராமஜெயம், துணை மேயர் அன்பழகன், காங்கிரஸ் பிரமுகர் கொட்டப்பட்டு சண்முகம், சேது ஆகியோர் கருணாநிதியின் நிலத்தை அவரது சகோதரி பெயரில் எழுதி கொடுக்கும்படி மிரட்டியதாக, திருச்சி நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் கே.என்.நேரு உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கொட்டப்பட்டு சண்முகம், கருணாநிதியின் மைத்துனர் காமராஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கே.என்.நேரு, ராமஜெயம், அன்பழகன் ஆகியோர் ஏற்கனவே வேறு வழக்குகளில் கைதாகி வெவ்வேறு சிறையில் இருந்ததால், போலீசாரால் அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்றும், எனவே இந்த 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல் துறை மனு செய்தது.

மனுவை விசாரித்த நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா, மூவரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். இதைத்தொடர்ந்து 3 பேரையும் நேற்று மாலை போலீசார் திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை போலீஸ் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் நில அபகரிப்புப் பிரிவு உதவி கமிஷனர் மனோகர், இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இன்று காலை மீண்டும் 3 பேரிடமும் விசாரணை தொடர்ந்தது. விசாரணை முழுவதையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

இன்று மாலை 5 மணியுடன் போலீஸ் காவல் முடிவடைகிறது. அதன்பிறகு 3 பேரையும் மீண்டும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவர். இதையடுத்து கே.என்.நேரு கடலூர் சிறையிலும், ராமஜெயம் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், அன்பழகன் சேலம் சிறையிலும் அடைக்கப்படுவர்.

நேரு உள்பட 3 பேரும் வைக்கப்பட்டிருந்த ஆயுதப்படை திருமண மண்டபம் முன் தி.மு.கவினர் ஏராளமான திரண்டதால் ஆயுதப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமஜெயத்துக்கு சிறை மாற்றம் கிடைக்குமா?:

இதற்கிடையே, நேருவின் தம்பி ராமஜெயத்தை திருச்சி சிறைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

ராமஜெயத்தை பாளையங்கோட்டை சிறையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகியுள்ளார்.

இதுகுறித்து ராமஜெயத்தின் மனைவி லதா தாக்கல் செய்துள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவில், துறையூர் ஸ்ரீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எனது கணவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

என் கணவருக்கு 50 வயது ஆகிறது. இந்த வயதில் அவரது உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே எனது கணவரை திருச்சி சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பரிசீலித்தது. பின்னர் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+