தமிழக உளவுப்பிரிவு டி.ஐ.ஜியாக 'அதிரடி' பொன் மாணிக்கவேல் நியமனம்!

மாநில உளவுப்பிரிவின் கூடுதல் டி.ஜி.பியாக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டு 'டப்பா' பதவியான போலீஸ் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக இருந்த பொன்மாணிக்கவேல், மாநில உளவுப்பிரிவு டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதவியாகும்.
அதே போல கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அருண், சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பியாகவும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன், மதுரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட புதிய எஸ்.பியாக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொன் மாணிக்கவேல் உடனடியாக உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிரடியான நடவடிக்கைகளுக்குப் பேர் போன பொன் மாணிக்கவேல், மிக நேர்மையான அதிகாரியும் ஆவார்.
அதே போல ராஜேந்திரனும் மிக நேர்மையான அதிகாரியே. அவர் திமுக ஆட்சியில் சென்னை கமிஷ்னராக இருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவரை சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மாற்றினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி பதவியைத் தந்தார். இப்போது மீண்டும் அவரை முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications