அழையாத வீட்டுக்கு விருந்தாளியாகப் போகமாட்டோம்! - சொல்கிறார் பிரேமலதா

மதுரை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் கவியரசு, மற்றும் மாமன்ற உறுப்பின்ர வேட்பாளற்களை ஆதரித்து, அக் கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.
அவர் பேசுகையில், "தேர்தலில் ஓட்டு கேட்பதற்கு மட்டும் நாங்கள் வருவதில்லை. மக்களுக்கு நன்மை செய்யவே உங்களை பார்க்க வருகிறோம் (சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்தபிறகு நன்றி சொல்லக் கூட தேமுதிக தலைவரோ, அவர் மனைவியோ மதுரைப் பக்கம் இதுவரை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது!).
நான் மதுரை மருமகள், உங்கள் வீட்டுப்பெண் என்ற உரிமையோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆட்சியில் விடுதலைக் காற்றை உங்களால் சுவாசிக்க முடியவில்லை. ஆனால் உங்கள் சிரித்த முகத்தை பார்க்கும்போது இப்போது சுதந்திர காற்றை சுவாசிப்பது தெரிகிறது.
அதே சமயம் நாம் பாதிக் கிணற்றை தாண்டி விட்டோம். இன்னும் பாதிக் கிணற்றை தாண்ட வேண்டும். அரசியல் என்ற மாபெரும் ஆலமரத்தின் வேர்தான் உள்ளாட்சி தேர்தல். இந்த தேர்தலில் கவுன்சிலருக்குத்தானே நாம் ஓட்டுப்போடுகிறோம் என்று நினைத்துவிடக் கூடாது. நமக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க, நமக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
கடந்த ஆட்சியின் போது திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் பணம் கொடுத்து கேவலமாக ஓட்டு வாங்கினார்கள். அதனை நடந்து முடிந்த சட்ட சபைத்தேர்தலில் மாற்றிக் காண்பித்தீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை மாநகராட்சியில் மேயர், துணை மேயர், கவுன் சிலர்கள் யாரும் மக்களுக்காக நன்மை செய்ததாக தெரியவில்லை. அவர்கள் நவராத்திரி கொலுவில் இருக்கும் பொம்மை போல் இருந்தார்கள்.
மதுரையின் மைந்தன்
மதுரையில் எனக்கு தெரியாத வீதிகள், சந்துக்களே இல்லை. அனைத்து தெருக்களும் குப்பைகளாக சாக்கடை ஓடும் வீதிகளாக இருக்கின்றன. கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. அரசு ஆஸ்பத்திரியில் கூட மூக்கைப்பிடித்துக் கொண்டு தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. மதுரையின் மைந்தன் என்று சொன்னால் கேப்டனைத் தான் சொல்ல முடியும். மதுரையில் இருக்கக்கூடிய மத்திய மந்திரி மக்கள் வாழ்வாதாரத்துக்காக பாடுபடவில்லை.
மக்களுக்காக கொடுத்து கொடுத்து சிவந்த கரமாக விஜயகாந்த் உள்ளார். அவர் தன்னுடைய சொந்த பணத்தில் பலகோடி நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்.
அழையாத விருந்தாளி அல்ல
கடந்த ஆட்சியில் ஊழலோ ஊழல் என்ற அளவுக்கு ஊழல்கள் நடந்தன. சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் மக்களிடம் கேட்டு, அவர்களின் விருப்பப்படி தில்லுமுல்லு கட்சியான தி.மு.க.விடம் இருந்து தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்றவே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம்.
தற்போது கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளோம். அது எதற்காக என்று மக்களாகிய உங்களுக்கே தெரியும். அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக எப்போதும் விஜயகாந்த் செல்லமாட்டார். சென்றதும் இல்லை," என்றார்.












Click it and Unblock the Notifications