மும்பையில் பரபரப்பு- குடிபோதையில் கார் ஓட்டி ரகளை செய்த ஏர்ஹோஸ்டஸ்
மும்பை: குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று மும்பை சாலையை அமர்க்களப்படுத்தி விட்டார் ஒரு விமான பணிப் பெண். அவர் தாறுமாறாக கார் ஓட்டியதில் ஒரு ஆட்டோ சேதமடைந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண்ணின் பெயர் லூனா. இவர் தனியார் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறார். நேற்று இவர் குடிபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார். சின்சோலி பந்தர் என்ற இடத்தில் இவர் தாறுமாறாக கார் ஓட்டி வந்து ஒரு ஆட்டோ மீது மோதி விட்டார். இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியது.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது போலீஸாரையும் தனது கைப் பையால் தாக்கியுள்ளார் லூனா. இதையடுத்து போலீஸார் அவரை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முல்லே கூறுகையில், படு வேகமாக கார் ஓட்டி வந்துள்ளார் லூனா. ஆட்டோ ஒன்றின் மீது அவரது கார் மோதியது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக ஆட்டோ டிரைவரா தாறுமாறாக திட்டினார் லூனா.
மேலும் சமாதானப்படுத்த முயன்ற போலீஸாரையும் தாக்கினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் என்றார்.
லூனாவுடன் காரில் அவரது காதலர் ராக்கி சாஸ்வத் உள்ளிட்ட 2 ஆண்களும் இருந்துள்ளனர். சாஸ்வத்தும் குடிபோதையில் இருந்தார். அவரையும் போலீஸார் கைது செய்தனர். 3வது நபர் தப்பி ஓடி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications