தேர்வில் ஆள்மாற்றம் செய்த புதுச்சேரி கல்வி அமைச்சர் முன் ஜாமீன் மனு தாக்கல்
புதுச்சேரி: பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், கைது நடவடிக்கையை தவிர்க்க, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரம் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதனால், அவர் கடந்த மாதம் துணைத் தேர்வு எழுத விண்ணப்பம் செய்தார். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் எழுதுவதற்கு திண்டிவனம் தாகூர் பள்ளி அவருக்கு தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டது.
ஆனால் அவர் நேரடியாக தேர்வு எழுதாமல் ஆள்மாறாட்டத்தின் மூலம் அத்தேர்வுகளை எழுதி இருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்ததில் ஆள்மாற்ற புகார் உண்மை என தெரிந்தது.
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை அறிக்கையின் பேரில் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. இதில் அமைச்சர் கல்யாண சுந்தரம் மீது ஆள்மாறாட்டம், மோசடி செய்தல், தெரிந்தே குற்றமிழைத்தல், உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமைச்சர் கல்யாணசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்த தமிழக போலீசார் தீவிர முயற்சி எடுத்தனர். இதையடுத்து, புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் பேரவைத் தலைவர் சபாபதியை சந்தித்து முறைப்படி அமைச்சரை விசாரிக்கும் வகையில் அவர் ஆஜராகும்படி சம்மன் அளித்தனர்.
சம்மனை பெற்றுக் கொண்ட பேரவைத் தலைவர், திங்கள்கிழமை அன்று அமைச்சர் கல்யாணசுந்தரத்தை ஆஜர்படுத்த முடியாது. வேறொரு நாளில் ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது கல்யாணசுந்தரம் ராஜினாமா செய்ய வேண்டும் என புதுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மாணவர், வாலிபர் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் ஆதவன், மாவட்ட கல்வி அதிகாரி ரஜினிகாந்த் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமைச்சருக்காக பரீட்சை எழுதிய பட்டதாரி நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் விசாரணை இன்று பிற்பகல் நடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications