திமுக தனித்துப் போட்டியிடுவது ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் எனக்கு 70 ஆண்டு கால அனுபவம் உள்ளதால் தேர்தலை எப்படி சந்திப்பது என்று எனக்கு தெரியும். அதனால் தான் தனித்துப் போட்டியிடுகிறோமே தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை மேயர் பதவிக்கு போட்டியிடும் மா. சுப்பிரமணியன் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை திருவொற்றியூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
இங்கு மாநாடு போல் கூடியிருக்கும் மக்கள் மத்தியில் கே.பி. பி. சாமி இல்லை என்பதால் கவலையாக இருக்கிறது. அவர் திராவிட இயக்கத்திற்காக பாடுபட்டவர். எப்போதோ நடந்த, ஏதோ வழக்கை காட்டி கைது செய்துள்ளனர். அவரை ஏன் சிறையில் அடைத்துள்ளனர் என்று எனக்கும் தெரியவில்லை, சிறையில் அடைத்தவர்களுக்கும் தெரியவில்லை.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் அவர்களின் துன்பத்தைப் போக்கத் துடித்தவர் சாமி. மீனவர்களுக்காக குரல் கொடுத்தவர். தேர்தல் நேரத்தில் அவரை சிறையில் வைத்துவிட்டால் வெற்றியை தடுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் என்ன தான் வதைத்தாலும், அடிக்க அடிக்க எழும் பந்தைப்போல திமுக எழும்.
பொய்யான வழக்குகள், இல்லாத கொடுமைகளை திமுவினருக்கு செய்தாலும் திமுக எதையும் தாங்கும். திருவொற்றியூரில் நான் பிரசாரம் செய்வது ஒன்று புதிதன்று. ஏற்கனவே இங்கு பல தடவை பேசியிருக்கிறேன்.
இருப்பினும் யாரும் அலுத்துக் கொள்ளாமல் நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்க ஆவலாக கூடியிருக்கிறார்கள். தேர்தல் பிரசாரத்தில் யார், யாரோ எதை எதையோ சொல்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் எனக்கு 70 ஆண்டு கால அனுபவம் உள்ளதால் தேர்தல் எப்படி சந்திப்பது என்று எனக்கு தெரியும்.
அதனால் தான் திமுக தனித்துப் போட்டியிடுகிறது. அதற்காக கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் எங்களுக்கு விரோதிகள் அல்ல. ஆனால் அவர்கள் பேசக்கூடாததையும், எழுதக்கூடாததையும் செய்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததால் தான் உறவை முறித்தோம் என்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். எனக்கு பொது உடமைக் கொள்கைகளில் அதிக பற்று உண்டு. நான் ஏற்கனவே பல முறை கூறியது போல அண்ணா, பெரியாரை சந்திக்காமல் இருந்திருந்தால் கம்யூனிஸ்டுகாரனாகத் தான் இருந்திருப்பேன். எங்கள் ஆட்சியில் பல திட்டங்கள் அந்த அடிப்படையில் நிறைவேற்றப்பட்டன.
நான் கம்யூனிஸ்டுகளை ஒன்று கேட்க விரும்புகிறேன். நாங்கள் வாரியணைத்தும் எங்களை புறக்கணித்துள்ளீர்களே அதற்கு என்ன காரணம்? பதவியேற்பு விழாவுக்கு நரேந்திர மோடியை அழைத்த அதிமுக மட்டும் இனிக்கிறதா? நாங்கள் ஒன்றும் அரசியல் ஆதாயத்திற்காக தனித்துப் போட்டியிடவில்லை. மக்கள் தேவைக்காகவும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் தான் தனித்து நிற்கிறோம்.
திருவொற்றியூர் எனக்கு என்றுமே வெற்றியைத் தருவதால் தான் அது எனக்கு திருவெற்றியூராக உள்ளது. சென்னையைப் போன்று திருவொற்றியூரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகத் தான் அதை சென்னையுடன் இணைத்தோம். நான் 5 தடவை முதல்வராக இருந்து மக்கள் பணியாற்றிவிட்டேன்.
நான் 6வது முறையாக முதல்வராக எங்கள் தோழர்கள் உங்களிடம் ஆதரவு கேட்டனர். ஆனால் நீங்கள் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள். நான் வீட்டிற்கு சென்றாலும், நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையை மறக்கவில்லை. எங்கள் ஆட்சியில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை கொடுத்தோம். ஆனால் நீங்கள் தமிழை அழிப்பவர்கள் கையில் அந்த ஆட்சியை கொடுத்துவிட்டீர்கள்.
தற்போது சென்னையில் எங்கு பார்த்தாலும் தமிழில் பலகைகள் உள்ளது. நீங்கள் அவர்களை ஜெயிக்கவைத்தால் செம்மொழி பூங்காவுக்கு ஏற்பட்ட நிலைமை போன்று ஆகிவிடும். அப்படியாகாமல் மானத்துடன் வாழ வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் குறைந்தது தமிழையாவது காபபாற்ற முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications