சாயல்குடியில் மழை பெய்கையில் செல்போனில் பேசிய வாலிபர் மின்னல் தாக்கி பலி
ராமநாதபுரம்:சாயல்குடி அருகே மழை பெய்து கொண்டிருக்கையில் செல்போனில் பேசிய இளம் விவசாயி மின்னல் தாக்கி பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது தத்தாங்குடி. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிமுருகன் (22). விவசாயி. +2 வரை படித்துள்ளார். வயலுக்குச் சென்ற அவர் மழை பெய்து கொண்டிருக்கையில் செல்போனில் பேசியபடியே வீடுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார்.
பாண்டிமுருகன் வெளிநாட்டுக்குச் செல்லத் தேவையான ஏற்பாடுகள் செய்திருந்தார். தீபாவளி முடிந்ததும் வெளிநாடு கிளம்பலாம் என்றிருந்த அவர் மின்னல் தாக்கி இறந்தார்.
நெல்லையில் மின்னல் தாக்கி இருவர் பலி
நெல்லை மாவட்டம் முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் வேலிக்கருவை மரங்களை வெட்டிக்கொண்டிருந்த பருத்திவாய்குளத்தைச் சேர்ந்த விவசாயி மாடசாமியை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த மாடசாமிக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
எட்டயபுரம் அருகே உள்ள என் வேடப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி மனைவி மாரீஸ்வரி. இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை மனைவி சுப்பம்மாள் என்பவருடன் சேர்ந்து அங்குள்ள தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். மாலையில் திடீரென இடியுடன் மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மாரீஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சுப்பம்மாள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
