யூடியூபர் முக்தார் அகமது மீது குண்டர் சட்டம்.. சென்னை பத்திரிகையாளர் மன்றம் விமர்சனம்
சென்னை: பத்திரிகையளார் முக்தார் அகமது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. அலிஷா அப்துல்லா குறித்து அவர் வெளியிட்ட நேர்காணலில் கூறப்பட்ட கருத்துகள் நிச்சயம் யாரலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றாலும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் அதீத நடவடிக்கையாக கருதுகிறோம் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் விமர்சித்துள்ளது.
பாஜக மாநில விளையாட்டு, திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பர் அலிஷா அப்துல்லா. இவர் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், 'எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்புபடுத்தி யூடியூபர் முக்தார் அகமது, பாஜக முன்னாள் பிரமுகர் திருச்சி சூர்யா ஆகியோர் இழிவான கருத்துகளுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, சென்னை காவல் ஆணையரின் உத்தரவின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அலிஷா அப்துல்லா புகாரில் தெரிவித்திருந்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தாரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருச்சியில் சூர்யாவை (33) தனிப்படையினர் கடந்த 4-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான யூடியூபரான வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த முக்தார் அகமதுவை (48) தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மண்டியாவில் முக்தார் அகமதுவை தனிப்படையினர் கடந்த வாரம் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இவர் மீது ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் இருந்தது.
சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவது தொடர்பாக இவர் மீது 20-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில் முக்தார் மற்றும் சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "பல முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய பத்திரிகையாளர் முக்தார் அகமது தற்போது யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில் பாஜக நிர்வாகி திருமதி. அலிஷா அப்துல்லா குறித்து மோசமாக பேசியது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
முக்தார் அகமது நேர்காணல் செய்யும் விதம், அவர் கேட்கும் கேள்விகள், ஒரு நபரின் அந்தரங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பது, பெண்கள் குறித்து அவர் வெளியிடும் கருத்து ஆகியவற்றால் சர்சைக்குரிய நபராகவே பார்க்கப்படுகிறார். மேற்குறிப்பிட்ட விஷயங்களில் சென்னை பத்திரிகையளார் மன்றத்திற்கும் அவர் மீது கடுமையான விமர்சனம் உள்ளது. சமீபத்தில், அலிஷா அப்துல்லா குறித்து அவர் வெளியிட்ட நேர்காணலில் கூறப்பட்ட கருத்துகள் நிச்சயம் யாரலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் அதீத நடவடிக்கையாகும். அத்துடன், இந்த நடவடிக்கை மறைமுகமாக அனைத்து பத்திரிகையாளர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
ஆகவே, பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. குண்டர் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications