நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கு.. அதிரடி காட்டிய சென்னை ஐகோர்ட்!
சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை நேர்மையாகவும், வெளிப்படையாகயும் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிந்த காரணத்தினால் மே 12 ஆம் தேதி அந்த தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தொடர்ந்து, நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நீட் நுழைவுத் தேர்வை 22 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் எழுதிய நிலையில், அவர்கள் மீண்டும் மறுதேர்வை எழுத உள்ளனர். அவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியிடப்பட்டு, தேர்வு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது தேசிய தேர்வு முகமை.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீட் மறுதேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஜூன் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வை நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதை உறுதி செய்ய விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வெங்கடேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "நீட் தேர்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்படி உச்ச நீதிமன்றம், 2024 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிடப்பட்டு, விசாரணை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது" எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
