அறிவாலயத்தைத் தொடுகிற நாள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள்! - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அண்ணா அறிவாலயத்தை எடுத்துக் கொள்வேன் என்று கூறுவதை எந்த தி.மு.க.வினரும் பொறுத்துக் கொள்ள மாட்டான். அறிவாலயத்தைத் தொடுகிற நாள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள், என்று கருணாநிதி கூறினார்.

சென்னை மாநகராட்சி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திருவான்மியூரில் நடந்த தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

உள்ளாட்சிகளில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் கூறி வருகிறேன். தி.மு.க.வுக்கு தோல்வியை தரவேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு, பெரும் பணம் செலவிட்டு, ஆள், அம்பு, அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தி ஜெயலலிதா பெரு முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு நாங்கள் சோர்ந்து விடவில்லை, துவண்டு விடவில்லை. என்றைக்கும் நம்முடைய வீரம் நம்மைவிட்டு விலகியதில்லை என்று இந்த தேர்தலில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள் பணியாற்றுகின்ற காட்சியைக் கண்டு திரும்பியிருக்கிறேன்.

சென்னை மாநகராட்சி தேர்தல் முக்கியமான தேர்தல். சென்னை மாநகராட்சியில் பெறுகின்ற வெற்றி நாம் ஆற்றிய பணிக்கு மக்கள் தருகின்ற வெகுமதி, பரிசு என்ற எண்ணம் கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியுடன் அதிக தொடர்புடையவன் நான். ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.வின் வெற்றிக்கு அரும்பாடுபட்டவர்களில் நானும் ஒருவன்.

சென்னை மாநகராட்சிக்கு தி.மு.க. மேயர் வரவேண்டும் என்று பாடுபட்டு பல அடக்குமுறைகளை சந்தித்து, சோதனைகளுக்கு இடையே பல முறை வெற்றியை ஈட்டித் தந்தவன். அந்த வெற்றியை அண்ணாவின் காலடியில் வைத்தவன்.

5 ஆண்டு சாதனை

கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த சென்னை மாநகராட்சியில் என்னென்ன பணிகள் நடந்துள்ளன. அதற்காக பெற்ற விருதுகள் எத்தனை. கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் பிரதமர் முன்னிலையில் சீர்திருத்தங்களை நிறைவேற்றியதற்கான விருது, மாற்று திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்து மறுமலர்ச்சி ஏற்படுத்தியதற்காக குடியரசு தலைவரிடம் தேசிய விருது, இணையதள சேவைக்கான விருது, மழைக்காலத்தில் 155 மருத்துவ முகாம்கள் மூலம் 60,468 பேருக்கு சிகிச்சை அளித்ததற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது, பூங்காக்களில் யோகா மேடை அமைத்து இலவச யோகா பயிற்சி, மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து செந்தமிழில் பெயர் வைத்தால் ஒரு கிராம் தங்க மோதிரம், கட்டிட நுழைவு வாயிலில் திருக்குறளும், விளக்கமும் எழுதப்பட்டுள்ளது, வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை, தமிழில் கோப்புகளை கையாளும் சிறந்த அதிகாரிகளுக்கு பரிசு இப்படி பல்வேறு சாதனைகளை தமிழுக்காக, தமிழர்களுக்காக, சென்னையின் தூய்மைக்காக நடந்தது வேறு எங்குமில்லை.

அது தொடர வேண்டும். மா.சுப்பிரமணியன் மீண்டும் மேயராக வருவாரேயானால் இதை எல்லாம் தொடர முடியும். புதியவராக வந்தால் அவரால் நடைபெறும் காரியங்களை விட பழகியவர் வந்தால் புத்துணர்ச்சியோடு இந்த சாதனைகளை எல்லாம் மிகச்சிறப்பாக செய்வார் என்று அவரை நான் முன்மொழிந்தேன். கழகம் வழிமொழிந்தது. அதை நீங்களும் வழிமொழிய வேண்டும். அவரை வெற்றி வீரராக, சென்னை மேயராக ஆக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது.

தினந்தோறும் வதை

உள்ளாட்சிகளில் நாம் வெற்றி பெறுவதை தடுப்பதற்காக ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற, தினந்தோறும் நம்மை வதைத்துக் கொண்டிருக்கிற, ஏழை எளியோர்களை வாட்டிக் கொண்டிருக்கிற - கட்சியின் பெயரை நான் சொல்ல மாட்டேன் - தி.மு.க.வை வீழ்த்த வேண்டும், முன்னணி வீரர்களை முடக்கிப் போட வேண்டும், சிறையில் தள்ளிவிட்டு தேர்தலை நடத்தி தேர்தலில் வேலை செய்யக் கூட தி.மு.க.வினர் அஞ்சிட வேண்டும் என்று அதற்கான பணிகளை, ஆதாரங்களை சேர்த்து வைத்துக் கொண்டு நம்மை விரட்டிக் கொண்டிருக்கிற ஆட்சி தான் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் ஆட்சி.

இந்த ஆட்சியில் கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்று கூறினார். இந்த ஆட்சியில் இதுவரை 154 கொலை, 165 கொள்ளை, 102 செயின்பறிப்பு, 27 வழிப்பறி நடந்துள்ளது. அமைதியாக ஜெயலலிதா ஆட்சி இருக்கிறது என்பதற்கு அடையாளங்களா? சட்டம், ஒழுங்கு, அமைதி இப்படி இருக்கிறது.

அண்ணா அறிவாலயத்தை தொட்டுவிட முடியுமா...

தமிழ்நாட்டில் நிலங்களை எல்லாம் சில பேர் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை மீட்டு பலருக்கு தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார். எவ்வளவு நிலம் மீட்கப்பட்டிருக்கிறது, எத்தனை பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள்.

அண்ணா அறிவாலயத்தை எடுப்பேன் என்கிறார். அதை தொடுகிற நாள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுகிற நாளாக இருக்கும். அது தி.மு.க. சொத்து. தி.மு.க.வில் இருக்கிற ஏழை எளியோர், பாட்டாளி மக்களை கொண்டு உருவான ஒரு பாசறை. பாசறை இளைஞர்கள் ரத்தத்தை சிந்தி, நரம்புகளை அறுத்து தந்து, எலும்புகளை உடைத்துக் கொடுத்து கட்டிய மாளிகை.

பொறுத்துக் கொள்ள மாட்டான்

அண்ணாவுக்காக, பெரியாருக்காக கட்டப்பட்ட மாளிகை அண்ணா அறிவாலயம். அதை எடுத்துக் கொள்வேன் என்றால் அதனை பொறுத்துக் கொள்ளக் கூடியவர்கள் யாரும் இல்லை. தி.மு.க.வில் இடம்பெறாதவர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தி.மு.க.வின் சாதாரண தொண்டன் கூட அதை அனுமதிக்க மாட்டான். எங்கள் எலும்புகளை அடித்து நொறுக்கி புதைத்து விட்டுதான் இந்த அண்ணா அறிவாலயத்தை எடுத்துக் கொள்ள முடியும்," என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+