ஆயிரம் விளக்கு, திருவொற்றியூரில் பூத்களை அதிமுகவினர் கைப்பற்றியுள்ளனர்- மா.சுப்ரமணியம் புகார்

கிண்டி அரிமா சங்க பள்ளிக்கூட வாக்குச் சாவடியில் இன்று மா.சுப்பிரமணியம் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எந்த வாக்குச் சாவடியிலுமே வீடியோ பதிவு செய்யப்படவில்லை. பாதுகாப்பும் சரியில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், அதை அவமதிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இது வருத்தத்திற்குரியது.
இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகாராக எழுதி கொடுத்து உள்ளேன். பதட்டமான இடங்களில் வெளி மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடத்தில்கூட அவர்கள் பணி அமர்த்தப்படவில்லை.
திருவொற்றியூர், ஆயிரம் விளக்குப் பகுதிகளில் வாக்குச் சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியுள்ளனர். அனைத்து வாக்கு் சாவடிகளிலுமே பதட்ட நிலை காணப்படுகிறது. பல வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி அதிமுகவினர் கள்ள ஓட்டுக்களைப் போட்டு வருகின்றனர்.
திருவொற்றியூர், ஆயிரம் விளக்கு சாவடியில் காத்து நின்ற வாக்காளர்கள் மிரட்டி துரத்தப்பட்டுள்ளனர். இது பற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் டெலிபோனில் புகார் தெரிவித்துள்ளேன்.
தேர்தல் அதிகாரியிடமும் புகார் செய்துள்ளேன். பொதுமக்கள் ஆர்வமாக ஓட்டு போட வருகிறார்கள். ஆனால் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
தற்போதைக்கு சென்னையில் வாக்குப் பதிவு மந்தமாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அதிமுக ஆட்சியில் தேர்தல் நியாயாக நடைபெறாது என்ற மக்கள் நம்பிக்கைதான். வாக்குப் பதிவின் இறுதியில் 50 முதல் 55 சதவீத அளவிலான வாக்குகளேப் பதிவாகும் என கருதுகிறேன் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
