விடுதியில் யுனானி மாணவர்கள்- சித்தா மாணவர்கள் திடீர் போராட்டம்
சென்னை: சென்னையில் உள்ள சித்தா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் யுனானி மருத்துவ மாணவர்கள் தங்க வைக்கப்பட்டதை எதிர்த்து சித்தா மாணவர்கள் நேற்று இரவு திடீர் என்று போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை அரும்பாக்கத்தை அடுத்த அண்ணா வளைவு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சித்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்த கல்லூரிக்கு அருகில் உள்ள அண்ணா மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கல்லூரியில் யுனானி, யோகா வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக யுனானி படிக்கும் மாணவர்கள் சிலர் சித்தா மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சித்தா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று நள்ளிரவில் தங்கள் பொருட்களுடன் விடுதிக்கு வெளியே வந்து திடீர் என்று போராட்டத்தில் குதித்தனர். விடுதிக்குள் செல்ல முயன்ற யுனானி மாணவர்களையும் தடுத்து நிறுத்தினர். அதனால் சித்தா மற்றும் யுனானி மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுகவார்த்தை தோல்வியடைந்ததால் இன்று காலையிலும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இது குறித்து சித்த மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் கூறியதாவது,
சித்தா மாணவர்களுக்காக கடந்த 1999ம் ஆண்டு இந்த விடுதி கட்டப்பட்டது. 300 மாணவர்களை கொண்ட விடுதியில் மொத்தம் 34 அறைகள் மட்டுமே உள்ளது. இதில் நோயாளி அறை, விடுதி வார்டன், காவலாளி ஆகியோருக்கு என்று 4 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 30 அறைகளில் அறைக்கு 3 பேர் தங்கியுள்ளோம். எங்களுக்கே இடம் போதாத நிலையில், யுனானி மாணவர்கள் மற்றும் வெளியாட்கள் சிலரை விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
இதனை கண்டித்து கடந்த மாதம் 13ம் தேதி வகுப்பு புறக்கணிப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் எங்கள் போராட்டத்தை தீவிரமாக்கி உள்ளோம். எங்களுக்காக ஒதுக்கப்பட்ட விடுதியில் வேறு யாரையும் தங்க அனுமதிக்கமாட்டோம் என்றனர்.
சித்தா மாணவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நேற்று இரவு யுனானி மாணவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications