நாளை முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்-புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் ரெடி

Subscribe to Oneindia Tamil

Parliament
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் செவ்வாய்கிழமை தொடங்க உள்ள நிலையில் இரு அவைகளிலும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்கட்சிகள் தயாராகிவருகின்றன. விலைவாசி உயர்வுக்கு எதிராக கூட்டத் தொடரின் முதல்நாளிலேயே ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வரவும் பாஜக, இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புயலை கிளப்பி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 22-தேதி தொடங்கி டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு குடைச்சல் கொடுக்க பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தயாராகிவருகின்றன.

குறிப்பாக விலைவாசி உயர்வு, ஊழல் தொடர்பாக கூட்டத் தொடரின் முதல்நாளிலேயே ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் பாஜகவும், இடதுசாரிகளும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.மற்ற எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை செய்த பின், ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து முடிவு செய்யவுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

நடுங்க வைக்கும் 45 பிரச்சினைகள்

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளும்வரை கூட்டத் தொடரை நடத்த விடமாட்டோம் என்று ஏற்கனவே அப்பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர்.இது தவிர, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கிவைத்திருப்போர் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவித்தல், காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யும் விவகாரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன.

புயலை கிளப்பும் 2 ஜி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று பாஜக, இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தவுள்ளன. உத்தரப் பிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள முதல்வர் மாயாவதியின் அறிவிப்பு, அரசுத் திட்டங்களில் நிதி முறைகேடுகள் குறித்து தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு, ஆகியவை நாடாளுமன்ற விவாதங்களில் எதிரொலிக்க உள்ளன.

31 மசோதாக்களை நிறைவேற்ற முடிவு

பொருளாதாரம் தொடர்பான மசோதாக்கள், நீதித்துறை தரப்படுத்துதல் மற்றும் கணக்குப்பொறுப்புச் சட்டம், லோக்பால் மசோதா, 26 சதவீத அன்னிய முதலீட்டுக்கு வழிவகை செய்யும் ஓய்வூதிய நிதி மசோதா உள்ளிட் ட 31 மசோதாக்களை இந்தக் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு கொண்டுவரவும், நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கல்வித்துறை புகார்கள்

கல்வித் துறை தொடர்பான புகார்களை விசாரிக்க நீதி விசாரணை அமைப்பை ஏற்படுத்தும் மசோதா, தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனச் சட்டம், காஞ்சிபுரம் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் நிர்வகித்தலுக்கான கல்வி நிறுவனச் சட்டம், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 8 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை மத்திய அரசு கல்வி நிறுவனச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் மசோதா, கட்டட வடிவமைப்பாளர்கள் மசோதா, பதிப்புரிமை மசோதா, குழந்தைகளுக்கான கட்டாயக் கல்விச் சட்டம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஜன் லோக்பால் மசோதா?

ஊழல் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், நிதி முறைகேடு தடுப்புச் சட்டம், அணுசக்தி ஒழுங்குமுறை சட்ட மசோதா உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. அண்ணா ஹசாரே வலியுறுத்திவரும் ஜன்லோக்பால் மசோதா, இக்கூட்டத் தொடரின் கடைசி வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்கட்சிகளுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராகவுள்ளது. எனவே, கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்படும் அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனாலும் வழக்கம் போல அமளி துமளிகளுடன்தான் இந்த குளிர்காலக் கூட்டத் தொடரும் நடந்தேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+