ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார்: விடுவிக்கக் கோரி மற்ற மாணவிகள் சாலை மறியல்
கரூர்: கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் பள்ளி மாணவி ஒருவரை ஆசிரியர் சீரழித்து விட்டதாகக் கூறி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை விடுதலை செய்யக் கோரி 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி இனியா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி நீதிமன்ற நீதிபதி நவமூர்த்தியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் தான் படிக்கும் சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ள இளங்கோ தனக்கு வலுக்கட்டாயமாக மயக்க ஊசி செலுத்தி தன்னை சீரழித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஆசிரியர் இளங்கோவை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த பள்ளி மாணவிகள் ஆசிரியர் இளங்கோ நல்லவர், அவர் அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர். எனவே அவர் தவறு செய்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். பொய் புகார் அளித்த மாணவி இனியாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி1,000க்கும் மேற்பட்ட மாணவிகள் சின்னதாராபுரம், தென்னிலை சாலையில் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் சாந்தி மற்றும் அரசு அதிகாரிகள் வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு அனைவரையும் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications