For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனநாயக விரோத அரசாக செயல்பட ஆரம்பித்துள்ள ஜெயலலிதா அரசு: வைகோ

By Chakra
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு, தமிழகத்தின் உரிமையையும் நீதியையும் நிலைநாட்ட முனையாமல், ஓர வஞ்சகமாக, கேரளம் செய்யும் அக்கிரமமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டுகின்ற விதத்திலேயே செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாட்டு மக்களுக்குப் பாசன நீரும், குடிநீரும் வழங்குகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவது என்று, கேரள அரசு கங்கணம் கட்டிக்கொண்டு, அதற்கான ஆயத்த வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

புதிய அணை கட்டுவது என்ற பெயரால், தமிழகத்துக்கு 999 ஆண்டுகளுக்கு உரிமை உள்ள அணையை உடைக்க, பல வழிகளிலும் களத்தில் இறங்கி உள்ளது. புதிய அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது.

முல்லைப் பெரியாறு அணை, இந்தியாவிலேயே மிக வலுவானது. 200 அடி அடிமட்ட அகலம் கொண்டது. அத்தகைய அடிமட்ட அகலம் கொண்ட அணை, இந்தியாவிலேயே வேறு எங்குமே கிடையாது. 500 அடி உயரத்தில், இடுக்கியில் கேரளம் கட்டி உள்ள அணையின் அடிமட்ட அகலம்கூட 56 அடி தான்.

ஆனால், கேரள மக்களுக்கு அச்சத்தை மூட்டி, முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் மனநிலைக்கு அவர்களைத் தயார்படுத்த, முந்தைய அச்சுதானந்தன் அரசு செயல்பட்ட வழியிலேயே, இன்றைய உம்மண் சாண்டி அரசும் ஈடுபட்டு உள்ளது. அதற்காக, இன்று கேரள அரசும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து முழு அடைப்பு நடத்துகின்றன.

இந்தப் பிரச்சனையில் தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு, தமிழகத்தின் உரிமையையும் நீதியையும் நிலைநாட்ட முனையாமல், ஓர வஞ்சகமாக, கேரளம் செய்யும் அக்கிரமமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டுகின்ற விதத்திலேயே செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டச் செய்து, அதன் விளைவுகளைக் காட்டி அணையை உடைக்கும் நோக்கத்தோடு, இன்று கேரளத்தில் நடைபெறுகின்ற போராட்டத்தில், பல இடங்களில் என்னுடைய உருவப் பொம்மையையையும் போட்டோவையும் போராட்டக்காரர்கள் எரித்ததோடு, "மரியட்டே மரியட்டே வைகோ மரியட்டே, சாகட்டும் சாகட்டும் வைகோ சாகட்டும்" என்று முழக்கங்களையும் எழுப்பி உள்ளனர்.

அத்துடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் உருவ பொம்மைகளையும் எரித்துள்ளனர். குறிப்பாக, குமுளி, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கட்டப்பனை, வெள்ளக்கடவு ஆகிய இடங்களில் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டபோது, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அருகில் இருந்து வேடிக்கை பார்த்துள்ளனர்.

இதை அறிந்து, பல இடங்களில் இருந்து வேதனையும், ஆத்திரமும் கொண்ட சகோதரர்கள், தங்கள் மனக்கொதிப்பைத் தொலைபேசியில் தெரிவிக்கின்றனர். எந்தக் காரணத்தை முன்னிட்டும், ஆத்திர உணர்ச்சிக்குத் தமிழக மக்கள் இப்போது இடம் கொடுத்து விடக் கூடாது. அப்படி ஆத்திரமூட்டுவதுதான், கேரளத்தினரின் திட்டம்.

தமிழகத்துக்கு வரும் பேருந்துகள் மீதும் கல்வீசித் தாக்கிச் சேதப்படுத்தி உள்ளனர். பதிலுக்கு உருவ பொம்மை எரித்தலோ, பேருந்துகளுக்குச் சேதம் விளைவிப்பது போன்ற எந்தச் செயலிலும் தமிழக மக்கள் ஈடுபட வேண்டாம்.

முல்லைப் பெரியாறு அணையையும், தமிழகத்தின் உரிமையையும் காக்க, நாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளவாறு, கேரளத்துக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற பொருளாதார முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என்று கூறியுள்ளார் வைகோ.

ஜனநாயக விரோத அரசாக செயல்பட ஆரம்பித்துள்ள ஜெ அரசு-வைகோ:

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஜனநாயக விரோத அரசாக செயல்பட ஆரம்பித்திருப்பதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் மாவீரர் தின பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை முதலில் அனுமதி அளித்திருந்தது. ஆனால் தியாகராய நகரில் நடக்கும் கூட்ட ஏற்பாடுகளை கவனிக்கச் சென்ற 100க்கும் மேற்பட்ட மதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கூட்டத்திற்கான அனுமதியை திடீரென ரத்து செய்துள்ளனர். ஜனநாயக விரோத அரசாக ஜெயலலிதா அரசு செயல்பட ஆரம்பித்திருக்கிறது. பேச்சுரிமைக்கு வேட்டு வைக்க முயற்சிக்கிறது.

கூட்டத்துக்கு அனுமதி கோரி நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம். நீதிமன்ற அனுமதி பெற்று நிகழ்ச்சியை நடத்துவோம் என்றார்.

English summary
ADMK government led by CM Jayalalithaa is becoming undemocratic, says MDMK leader Vaiko
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X