அடுத்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் ஹஸாரே... இரண்டாவது சுதந்திரப் போராம்!!

இது இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று அவர் வர்ணித்துள்ளார்.
அரசுக்கு இணையான அல்லது அரசை விட வலிமையான லோக்பால் மசோதா வேண்டும் என்பதுஅன்னா ஹசாரே கோஷ்டியின் வலியுறுத்தலாக உள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா திருப்தி அளிக்கவில்லை என்பதால் வலுவான லோக்பால் மசோதா உருவாக்க கோரி டிசம்பர் 11ம் தேதி ஞாயிறுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறும் இந்த உண்ணாவிரதம், ஒரு நாள் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லத்திசார்ஜ்க்கு அஞ்சக்கூடாது
தனது போராட்டத்தை இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று வர்ணித்துள்ள அன்னா ஹசாரே சிறைக்கு சென்றாலும், போலீசார் லத்தியால் அடித்தாலும் அஞ்சாமல் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்ற போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் உயிரை தியாகம் செய்யவும் சித்தமாக இருக்கவேண்டும் என்றும் ஹசாரே கூறியுள்ளார்.
27 ல் காலவரையற்ற உண்ணாவிரதம்
இதனிடையே நாளை நடைபெறும் ஒருநாள் உண்ணாவிரதம் தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்திய கிரண்பேடி, மனீஷ் சிசோதியா உள்ளிட்டோர், வலிமையான லோக்பால் உருவாக்கப்படாததை மக்களுக்கு தெரிவிக்கவே இப்போராட்டத்தை நடத்துவதாக கூறினர். இதை தொடர்ந்து வரும் 27 ஆம் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹசாரே தொடங்க இருப்பதாகவும் கிரண்பேடி தெரிவித்தார்.
கிரண் பேடி மீதான நிதி மோசடி, அறக்கட்டளை பண வசூல் முறைகேடு, அரவிந்த் கேஜ்ரிவால் மீதான ரூ 80 லட்சம் நிதி வசூல் முறைகேடு, போர்டு பவுண்டேஷனிடம் பல கோடிகள் பெற்ற குற்றச்சாட்டுகள் குறித்து அன்னா ஹஸாரே வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications