கேரளத்தில் தமிழர் மீது தொடர் தாக்குதல்- மலையாளிகளைக் காக்க ஜெ.வுக்கு சாண்டி கடிதம்!
திருவனந்தபுரம்: கேரளத்தில் நேற்று கூட 20க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்களைத் தாக்கி, தமிழக ஐயப்ப பக்தர்களை போலீஸாரின் துணையோடு மலையாளிகள் தாக்கி விரட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கேரளாவுக்குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் தினசரி தாக்கப்பட்டு வருகின்றனர். எந்தப் பக்கம் போனாலும் தாக்குதல் உறுதி என்ற நிலைதான் இதுவரை இருந்து வருகிறது. கோவை வழியாக நேற்று முன்தினம் கேரளாவுக்குள் போன ஐயப்ப பக்தர்களின் வேன்கள் 20க்கும் மேற்பட்டவை சரமாரியான தாக்குதலுக்குள்ளாகின. போலீஸாரே தாக்க்ச சொல்வதாக பாதிக்கப்பட்ட பக்தர்கள் நேற்று தமிழக எல்லையான வாளையாறுக்குத் திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினர்.
இந்த நிலையில் கேரளாவில் தமிழர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அதேபோல தமிழகத்தில் மலையாளிகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கூறி சாண்டி ஜெயலலிதாவுக்கு ஒருகடிதம் அனுப்பியுள்ளார்.
அதில்,
தமிழகத்தில், மலையாளிகள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழகத்தில், மலையாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மலையாளிகளுக்கு எதிராக, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள், கேரளாவில் அவமானப்படுத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது. கேரளாவில், தமிழர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளையும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளோம்.
இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்கவும், அமைதி நிலவவும், இரு மாநில முதல்வர்களும் சேர்ந்து, கூட்டாக அறிக்கை வெளியிடவேண்டும்.
இரு மாநில மக்களின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் சென்றுள்ளது துரதிருஷ்டமானது. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் யாரும் தாக்கப்படுவதில்லை. அதற்கான நடவடிக்கைகளை, எங்கள் மாநில அரசு எடுத்துள்ளது.
கேரளா - தமிழக எல்லையில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, குமுளியிலும், இதர பதட்டம் நிறைந்த பகுதிகளிலும், பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இருந்தாலும், அதையும் மீறி, அவ்வப்போது தவறான தகவல் பரப்பப்படுகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கேரளாவின் தோட்டத் தொழில் துறையில், ஏராளமான தமிழர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் தாக்கப்படவில்லை. மாறாக, கேரளத்தினரின் செயல்பாடுகளால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போலீசாரும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில், கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அதேபோல, கேரளாவைச் சேர்ந்த நிறைய பேர், தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம், பாதிப்பு எதுவும் ஏற்படுமோ என, கேரளாவில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
எனவே, தமிழகத்தில் உள்ள கேரளத்தவர்களுக்கு எதிராக, யாரும் வன்முறையில் ஈடுபடாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள சில செய்தி நிறுவனங்கள், முற்றிலும் தவறான, பொருத்தமற்ற படங்களை வெளியிட்டு, மக்களை பரபரப்புக்கு ஆளாக்குகின்றன. இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தை, கேரளா எப்போதும் மதிக்கிறது என்று சொல்லியுள்ளார் சாண்டி.












Click it and Unblock the Notifications