For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30,000 லாரிகள் நிறுத்தம்-கேரளாவுக்கு பால், காய்கறி, முட்டை எதுவும் போகவில்லை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Lorries
சென்னை: தமிழக லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து கேரளாவிற்கு பொருட்களை கொண்டுசெல்லும் லாரிகள் அனைத்தும் இன்று கேரளாவுக்குப் போகவில்லை. இதனால் கேரளாவுக்கு இன்று தமிழகத்திலிருந்து பால், முட்டை, அரிசி, காய்கறி என எந்த அத்தியாவசியப் பொருட்களும் போகவில்லை.

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையால் தமிழக லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, கேரளாவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் 30000 லாரிகள் இன்று ஒரு நாள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சம்மேளனத்தின் இணைச்செயலாளர் சி.துரைசாமி ஈரோட்டில் செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது

லாரிகள் மீது தாக்குதல்

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை நடந்து கொண்டு இருக்கும்போது கேரளாவுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 50 லாரிகள் தாக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்தும், கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் புதன்கிழமையன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் 25 லட்சம் லாரிகள் இயங்குகின்றன. இதில் கேரளாவுக்கு 30 ஆயிரம் லாரிகளில் பொருட்கள் தினமும் ஏற்றி செல்லப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் புதன்கிழமையன்று போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.

வேலைநிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் இயங்குகின்றன. இதில் 1,000 லாரிகள் மூலம் கேரளாவிற்கு காய்கறிகள், முட்டை, மஞ்சள், எண்ணெய் போன்ற பொருட்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. இந்த 1,000 லாரிகளும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றன என்றார் அவர்.

எங்கிருந்தும் லாரிகள் போகவில்லை

சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் செல்லவில்லை.

முன்னதாக தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில்,

முல்லைப்பெரியாறு பிரச்சினை காரணமாக இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளாவுக்கு அனைத்து வழித்தடங்களிலும் செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, பால், முட்டை, பருப்புவகைகள், கறிகோழி, உள்ளிட்டவை அங்கு கொண்டு செல்லப்படவில்லை.

மேலும் கேரளா அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளுக்கும், லாரி டிரைவர்களுக்கும், பாதுகாப்பு வழங்கி, லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

40 லட்சம் முட்டைகள் நிறுத்தம்

நாமக்கல்லில் இருந்து லாரிகள் மூலம் தினமும் 40 லட்சம் முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பல லாரிகள் இன்று காலை 5 மணிக்கு முன்னதாக கேரள எல்லைக்குள் சென்று விட்டன. பல்லடம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கறிக்கோழிகளும் இதேபோல லாரிகளில் நேற்று பகலிலேயே கேரளாவுக்கு அனுப்பப்பட்டன.

தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து மாடுகள் இறைச்சிக்காக கேரளாவுக்கு லாரிகளில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து தினமும் 1000 லாரிகள் கேரளாவுக்கு சென்று வந்தன. இதன்மூலம் காய்கறிகள், முட்டை, மஞ்சள், எண்ணெய், ஜவுளி, மாட்டு தீவனம் போன்ற பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பல லட்சம் மதிப்பிலான முட்டை, மஞ்சள், எண்ணெய், ஜவுளி போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. இவை குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

ரூ. 500 கோடி காய்கறி, மளிகைப் பொருட்கள் நிறுத்தம்

கோவையில் இருந்து தினமும் ரூ.500 கோடி மதிப்புள்ள மளிகை, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் லாரிகளில் அனுப்பப்பட்டு வந்தன. கோவை மாவட்டத்தில் இருந்து நேற்று முதலே லாரிகள் கேரளாவுக்கு இயக்கப்படவில்லை. இன்று 2-வது நாளாக லாரிகள் ஓடவில்லை.

அத்தியாவசிய பொருட்கள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

குமரியிலும் லாரிகள் ஓடவில்லை

இதுபோல குமரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டுச் செல்லும் லாரிகளும் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தன.

இதுபற்றி குமரி மாவட்ட லாரிகள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கணேசன் கூறியதாவது,

முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எந்த சரக்குகளையும் கொண்டுச் செல்வதில்லை என்று முடிவு செய்து உள்ளோம். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு 500 லாரிகள் இயக்கப்பட்டு வந்தது. இன்று முதல் இந்த லாரிகள் கேரளாவுக்கு செல்லாது என்றார்.

உப்பு கூட போகவில்லை

இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து உப்பு, நெல்லை மாவட்டத்திலிருந்து கட்டுமானத்திற்கு தேவையான மணல், குமரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள், தோவாளை மார்க்கெட்டில் இருந்து பூக்கள் போன்றவை கேரளாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டு வந்தன.

இன்று முதல் இவை கேரளாவுக்கு போகவில்லை. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வரும் கேரளாவுக்கு குமரி மாவட்ட வழிப்பாதையும் மூடப்பட்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால்தான் தெற்கு ரயில்வேயி்ல் மலையாள அதிகாரிகளின் உதவியோடு, ரயில்கள் மூலம் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறார்கள்.

English summary
Nearly 30,000 lorries have been stopped in Erode district protesting against the atack on TN lorries in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X