லோக்பால்: பிரதமர், எம்.பி.க்களிடம் அன்னா முன்வைத்துள்ள 3 கோரிக்கைகள்
டெல்லி: லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அமைப்புகள் சுதந்திரமாக விசாரணை நடத்தும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா அமைய வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மற்றும் எம்.பி.க்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ஊழலுக்கு எதிராக சுமார் ஓராண்டாக நடைபெற்ற பிரசாரத்தால், ஊழலை ஒழிக்க மிக வலுவான சட்டம் வேண்டும் என்ற எண்ணம் நாட்டு மக்களிடையே வலுவடைந்துள்ளது. லோக்பால் மசோதா தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்திலும் விவாதத்துக்கு வந்துள்ளது. இதற்காக நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் லோக்பால் மசோதாவின் இப்போதைய நிலையில் எங்களுக்கு உள்ள ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லோக்பால் மசோதாவின் சரத்துகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வலுவான சட்டமாக லோக்பால் நிறைவேற்றப்படும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
எங்கள் தரப்பில் இருந்து மூன்று முக்கிய விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். நாட்டுக்கு உண்மையான ஊழல் எதிர்ப்பு சட்டத்தை அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையின் நோக்கம். வலுவான லோக்பாலுக்காக நாங்கள் தொடர்ந்து போராடவும் தயாராகவே இருக்கிறோம்.
சிபிஐ-யின் ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு லோக்பாலுடன் இணைக்கப்பட வேண்டும். அதேபோல மாநில ஊழல் ஒழிப்பு, லஞ்ச ஒழிப்புப் பிரிவு லோக் ஆயுக்தவுடன் இணைய வேண்டும்.
மத்திய அளவில் செயல்படும் லோக்பால், மாநில அளவில் செயல்படும் லோக் ஆயுக்தா இரண்டுமே தங்களுக்கென சுதந்திரமான விசாரணை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். எந்தவித புகாரும் தெரிவிக்கப்படாமல், யாருடைய பரிந்துரையும் இல்லாமல் தாங்களாகவே முன்வந்து விசாரிக்கும் அதிகாரத்துடன் அந்த அமைப்பு இருக்க வேண்டும். அவர்கள் விசாரிக்கும் வழக்குகளுக்கு தனி சட்ட அதிகாரம் வேண்டும்.
மூன்றாவதாக, சிபிஐ-யின் நிதி, நிர்வாகக் கட்டுப்பாடுகள் லோக்பால் அமைப்பின் கீழ் வர வேண்டும். சிபிஐ இயக்குநர் நியமனம் சுதந்திரமானதாக இருக்க வேண்டும், அதில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது. இது தவிர சி, டி பிரிவு அரசு அதிகாரிகளை லோக்பால், லோக் ஆயுக்தா விசாரணை அமைப்புகள் நேரடியாக விசாரிக்க அதிகாரம் வேண்டும்.
இதுபோன்ற அம்சங்கள் இல்லாமல் நிறைவேறும் லோக்பால் மசோதா இப்போது அமலில் உள்ளதுபோல் ஊழலுக்கு எதிரான வலுவில்லாத சட்டங்களில் ஒன்றாகவே அமையும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications