ரூ.434 கோடியில் 3,000 புதிய பஸ்கள் வாங்க ஜெயலலிதா உத்தரவு

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் 8 போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இப்போக்குவரத்துக் கழகங்கள் 21,169 பேருந்துகளை இயக்குவதன் மூலம் தேசிய அளவில் மிகப் பெரிய போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களாக விளங்குகின்றன.
நாளொன்றுக்கு 2.10 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். சென்னை பெருநகரப் பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு 55 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் பழுதுபட்ட பேருந்துகளால், பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இவற்றை சீர்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், புதிய பேருந்துகளை வாங்கிடவும், முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், 6 வருடங்கள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்பட்ட பழைய பேருந்துகளுக்கு பதிலாக ரூ. 434 கோடியே 75 லட்சம் செலவில் 3,000 புதிய பேருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, முதற்கட்டமாக 520 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ. 75 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் வழங்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
பெருகி வரும் மக்களின் போக்குவரத்து தேவைகளை, புதிய பேருந்துகள் வாங்குவதினால் மட்டுமே பூர்த்தி செய்ய இயலாது என்பதாலும், மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய அதிக அளவு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு நிதிநிலைமை ஏற்புடையதாக இல்லை என்பதாலும், நல்ல நிலையில் உள்ள எஞ்சின் மற்றும் அடிச்சட்டம் ஆகியவற்றை வீணாக்காமல் பயன்படுத்துவது சீரிய நடவடிக்கையாக அமையும் என்பதாலும், வயது முதிர்ந்த மற்றும் பழுதடைந்த பேருந்துகளில் அடிச்சட்டம் மற்றும் எஞ்சின் நல்ல நிலையிலுள்ள பேருந்துகளை கண்டறிந்து, அவைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், முதற்கட்டமாக 1,432 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றை ரூ. 97 கோடியே 58 லட்சம் செலவில் புதுப்பிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications