பெட்ரோல் விலை இன்றிரவு முதல் மீண்டும் ரூ. 2.13 உயரலாம்!
டெல்லி: ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவும் அதிகரித்துவிட்டதாகக் கூறி பெட்ரோல் விலையை ரூ. 2.10 முதல் ரூ. 2.13 வரை உயர்த்த மத்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வரலாம் என்றும் தெரிகிறது.
மாதந்தோறும் முதல் தேதியிலும் 16ம் தேதியிலும் பெட்ரோல் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றபடி மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
ஆனால், புத்தாண்டு என்பதால் நேற்று விலை உயர்வை அதிகாரிகள் ஒத்தி வைத்ததாகத் தெரிகிறது. இந் நிலையில் இன்று இரவு விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்பதும் தெரியவில்லை.
ரூபாயின் மதிப்பு சரிந்துள்ள நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.78 வரை உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கூறி வருகின்றன. இதனுடன் வாட் வரி உள்ளிட்ட வரிகளையும் சேர்த்தால் விலை ரூ. 2.13 வரை உயரலாம்.












Click it and Unblock the Notifications