2ஜி: ஆ. ராசா உதவியாளர் சந்தோலியா, பெகுரா ஜாமீன் குறித்து சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் உதவியாளர் ஆர்.கே. சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும் இது தொர்பாக சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் உதவியாளர் ஆர்.கே. சந்தோலியாவுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் அன்றே திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சந்தோலியாவின் ஜாமீனை நிறுத்திவைகத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சந்தோலியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஜி.எஸ். சிங்வி அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஒப்புக் கொண்டது. மேலும் சந்தோலியாவின் ஜாமீனை நிறுத்தி வைக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இதே வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுராவும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவையும் உச்ச நீதிமந்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து அந்த 2 பேரின் ஜாமீன் மனுக்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக பெகுரா ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசாவுடன் சேர்ந்து சதி செய்ததற்காக அவருக்கு கடந்த மாதம் 16ம் தேதி ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து தான் அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 14 பேரில் ஆ. ராசாவும், பெகுராவும் தான் சிறையில் உள்ளனர். மற்ற அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யபப்ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications