புத்தாண்டு தினத்தில் சென்னை சாலை விபத்தில் 4 பேர் பலி, கடலில் மூழ்கி 2 பேர் பலி
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே சாலை விபத்துகளில் சிக்கிய போலீஸ்காரர் உட்பட 4 பேர் பலியாகினர். மெரீனாவில் போலீசாரின் அறிவுரையை மீறி கடலில் குளித்த 2 பேர் அலையில் சிக்கி பலியாகினர்.
ஜனவரி 1ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் விமர்சியாக கொண்டாடப்பட்டது. இரவு 12 மணியை கடந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்த்து கொண்டனர். இந்த நிலையில் சாலையில் சென்ற 4 பேர் விபத்துகளில் சிக்கி பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே பைக்கில் 3 பேர் சவாரி
சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் நேற்றுமுன்தினம் 11.45 மணிக்கு 3 வாலிபர்கள் ஒரு மோட்டர் சைக்கிளில் புத்தாண்டு கோஷமிட்டு வேகமாக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதியது. இதில் மோட்டர் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற வாலிபர் சாலையி்ல் விழுந்து பலத்த காயமடைந்தார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு வழியில் பரிதாபமாக இறந்தார். போலீஸ் விசாரணையில் பலியான நபர் புதுவண்ணாரப்பேட்டை துறைமுக ஊழியர் காலனியை சேர்ந்த சம்பத்குமார்(26) என்பதும், வக்கீலுக்கு படித்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் சம்பத்குமாரின் கழுத்தில் காயம் இருப்பதால், அவரது இறப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தனியார் கம்பெனி ஊழியர் பலி:
தியாகராய நகரை அடுத்த காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராஜா(26). தனியார் நிறுவன ஊழியரான இவர் இரவு 12.30 மணிக்கு மோட்டார் சைக்கிளிலில், தியாகராய நகர் நியூ போக் சாலையில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் ராஜா பரிதாபமாக பலியானார்.
கூலித்தொழிலாளர் பலி:
புளியந்தோப்பை அடுத்த நேரு நகர் 3வது தெருவை சேர்ந்த மைக்கேல் மகன் சங்கர்(24). கூலித்தொழிலாளரான சங்கர் தான் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு தனது தெரு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சங்கர், மோட்டர்சைக்கிளில் தனது நண்பருடன் பெரம்பூர் மேம்பாலத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள், பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில் வண்டியின் பின்புறம் உட்கார்ந்திருந்த சங்கர் பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு பலியானார். சங்கர் உடன் சென்ற வாலிபர் படுகாயமடைந்து உயிர் தப்பினார்.
போலீஸ்காரர் பலி:
எருக்கஞ்சேரியில் வசித்து வந்தவர் அலாவுதீன்(26). இவர் அடையாறு மருதம் கமாண்டோ போலீஸ் படையில் வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு இன்னொரு போலீஸ்காரர் கார்த்திகேயன் என்பவருடன், அலாவுதீன் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார். வழியில் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையை தாண்டி வந்த போது, சாலை நடுவே இருந்த இருப்பு தடுப்பு மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அலாவுதீன் இறந்தார்.
புத்தாண்டு தினத்தன்று சாலை விபத்துகளில் சிக்கி 4 பேர் பலியான நிலையில், தானே புயலின் எதிரோலியாக சீற்றமாக இருந்த கடலில் குளிக்க சென்ற 2 வாலிபர்கள் பலியாகினர்.
கடலில் மூழ்கி 2 பேர் பலி:
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு மெரீனாவில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். 'தானே' புயல் தாக்கத்தை அடுத்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ராஜேந்திரன், குணசேகரன், முருகேசன் உட்பட 100க்கும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், யாரும் கடலில் யாரும் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் பிரசாரம் செய்து வந்தனர். அதையும் மீறி சிலர் கடலில் குளித்து கொண்டிருந்தனர்.
அவர்களில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அருண் சுகுமாரன்(19) என்ற இன்ஜினியரிங் மாணவரும், வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி குமார்(26) உள்ளிட்ட 2 பேரும் கடலில் அழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது அலையில் சிக்கிய 2 பேரும் பரிதாபமாக பலியாகினர். காணாமல் போன 2 பேரின் உடல்களையும் கடலோர காவல் படையின் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications