கடலூரில் புயல் நெருக்கடியைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு பால் விற்பனை- பூத்களில் அமைச்சர் ரெய்டு
கடலூர்: கடலூரில் புயல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் பற்றாக்குறையைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு பால் விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அமைச்சர் மு.சி.சம்பத் இன்று காலை பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று கலெக்டருடன் ஆவின் பூத்களில் ரெய்டு நடத்தினார்.
தானே புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள கடலூர் இயல்பு நிலைக்குத் திரும்ப கடுமையாக போராடி வருகிறது. இன்னும் அங்கு அத்தியாவசியப் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை, குடிநீர் பிரச்சினையாக உள்ளது. பால் கிடைக்கவில்லை. சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன.
மக்களின் இந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி ஆவின் பால் பூத்களில் அதிக விலைக்கு பால் விற்கப்படுவதாக மக்கள் குமுறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சித்தலைவர் அமுதவள்ளியுடன் அமைச்சர் மு.சி.சம்பத் திடீர் ஆய்வில் குதித்தார்.
திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆவின் பால்பூத் மையங்களில் இன்று அதிகாலை நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பொது மேலாளரும் அவர்களுடன் சென்றிருந்தார்.
பால் விற்பனை, விலை நிலவரம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பால் பூத்களில் இருந்தவர்களிடம் என்ன விலைக்கு விற்கிறீர்கள் என்றும் கேட்டார் அமைச்சர்.
அப்போது அவரை அணுகிய பொதுமக்கள் மக்களுக்கு பால் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு பால் விற்கிறார்கள் என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து பால் பூத் ஊழியர்களிடம், கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications