புதிய அணைக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்- கேரள அமைச்சர் திமிர் பேச்சு
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று கேரள நிதியமைச்சர் கேஎம் மாணி கூறினார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கடந்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. அப்போது புதிய அணைக்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு சொந்தமான இடத்தில்தான் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. தார்மீக அடிப்படையில் இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.
உச்சநீதிமன்றத்தின் உயர்நிலை குழுவுக்கு கூட புதிய அணை கட்ட கூடாது என்று கூற உரிமை இல்லை. புதிய அணைக்கான போராட்டத்தில் இருந்து கேரள மாணி காங்கிரஸ் பின்வாங்காது.
தற்போது உள்ள அணை மிகவும் பலகீனமாக உள்ளது. இதனால் தான் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி வருகிறது. அணை பகுதியில் வசிக்கும் மக்களின் பீதியை போக்க ஓரே வழி புதிய அணை கட்டுவதுதான். கேரள மக்களின் அச்சத்தை தமிழ்நாடும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாணி கூறினார்.












Click it and Unblock the Notifications