கதவு திறந்தே இருக்கிறது வேண்டுமானால் காங்., வெளியேறலாம்! – மம்தா காட்டம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரினாமுல் கட்சியின் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் வெளியேறலாம் என்று அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்காளத்தில் பல ஆண்டு போராட்டத்திற்குப் பின்னர் திரினாமுல் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இடதுசாரிகள் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சியும் மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக கருத்து நிலவுகிறது.
மேலும், நந்திகிராம், சிங்கூர், நில விவகாரங்களில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படவில்லை என்ற கோபமும் மம்தாவிற்கு ஏற்பட்டுள்ளது.
கதவு திறந்து இருக்கிறது
மேலும், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை திணிப்பது, லோக்பால், லோக் ஆயுக்தா போன்றவற்றில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களையும் மம்தா பானர்ஜி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற மம்தா காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடலாம். அவர்களுக்கான கதவு திறந்தே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் – திரினாமுல் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications