பொங்கல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு: 10 நிமிடத்தில் ஃபுல் – கூடுதல் பேருந்து?
சென்னை: தைப்பொங்கல் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்களில் 15 நிமிடத்திற்குள் டிக்கெட் முன்பதிவு முடிவடைந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சிரமத்தை தவிர்க்க கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு வந்து பணிபுரிகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்பது அவர்களின் ஆவல். தேவையை கருத்தில் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன் தெற்கு மண்டல ரயில் சிறப்பு ரயில்களை அறிவித்தது. சென்னை சென்டிரலில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக நாகர்கோவிலுக்கு 13-ந் தேதி இரவு சிறப்பு ரெயில் புறப்படுகிறது.
17-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்டிரலுக்கு சிறப்பு ரெயில் வருகிறது. மேலும் ஒரு சிறப்பு ரெயில் 14-ந் தேதி சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. 16-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து இதே மார்க்கத்தில் சிறப்பு ரெயில் சென்னைக்கு விடப்படுகிறது.
இது போல் கோவையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு 17-ந் தேதி இரவு சிறப்பு ரெயில் விடப்படுகிறது. சென்டிரலில் இருந்து கோவைக்கு 18-ந் தேதி இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அந்த ரயில்களுக்கான டிக்கெட் முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கி 15 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதனால் முன்பதிவு செய்வதற்காக அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?
பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்பதால் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications