சபரிமலையில் பாம்புகள், பிக்பாக்கெட்டுகள் தொல்லை!

சபரிமலை சீசனையொட்டி அங்கு ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதையடுத்து இந்த ஆண்டு வருமானம் ரூ.135 கோடியைத் தாண்டியுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையும், வருமானமும் மட்டும் அதிகரிக்கவில்லை கோவில் வளாகத்தில் பாம்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கோவில் வளாகத்தைச் சுற்றி அடர்ந்த காடுகள் உள்ளதால் அங்கிருந்து ஏராளமான பாம்புகள் வருகின்றன. இது பக்தர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதையடுத்து பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காகவே ஒருவரை தேவசம்போர்டு பணியமர்த்தியுள்ளது.
இது வரை சுமார் 120 பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 90 பாம்புகள் பிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை சீசனையொட்டி கோவிலைச் சுற்றியுள்ள வனப்பகுதிகள் அழிக்கப்பட்டன. இதனால் அங்கிருந்த பாம்புகள் கோவில் வளாகத்திற்குள் வருவதாகக் கூறப்படுகின்றது.
பக்தர்கள் மெய்மறந்து ஐயப்பனை மனதில் நினைத்து கோவிலுக்கு வருகின்றனர். ஆனால் அவர்களிடம் பிக்பாக்கெட் அடிக்கும் நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்பது வேதனை அளிக்கும் விஷயம்.
பிக்பாக்கெட்டுகள் பக்தர்களைப் போன்று உடையணிந்து கூட்டத்தோடு, கூட்டமாக கலந்துவிடுகின்றனர். தங்கள் வேலை முடிந்ததும் நைசாக கூட்டத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications