இந்திய மருத்துவத்துறைக்கு என்.ஆர்.ஐ ஒத்துழைப்பு அவசியம் – குலாம் நபி ஆசாத்
ஜெய்ப்பூர் : இந்திய மருத்துவத்துறையின் முன்னேற்றத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கேட்டுகொண்டுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டை தொடங்கிவைத்த அமைச்சர் பேசுகையில்,
ஒத்துழைப்பு அவசியம்
மருத்துவ ஆராய்ச்சி, கல்வித் துறையில் ஒத்துழைப்பு, தொலை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது மருத்துவ ஆராய்ச்சி துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பைப் பெற, தேவையெனில் அரசு தனது கொள்கைகளை மேலும் தளர்த்திக் கொள்ளவும் முன் வரும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கு மருத்துவ சேவை செய்யவும், மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கவும் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள சுகாதார அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அரசு அங்கீகாரம்
சுமார் 3 லட்சம் வெளிநாடு வாழ் இந்திய மருத்துவர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இங்கிலாந்தில் மட்டும் 40,000 பேர் உள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளில் முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் இங்கு மருத்துவம் கற்பிக்கத் தகுதி பெற்றவர்கள் என்று அரசு அங்கீகாரம் அளிக்கிறது.
நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மருத்துவமனை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அன்னிய நேரடி முதலீடுகளை அரசு ஊக்குவிக்கிறது.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 1 சதவீதமாக உள்ள சுகாதாரத் துறை ஒதுக்கீட்டை 2.5 சதவீதமாக உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுத் துறை - தனியார் கூட்டு இன்று பல துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இதை மேலும் விரிவுபடுத்த அரசு அனைத்து வழிமுறைகளையும் ஆராயும்.
கிராமங்களில் கட்டமைப்பு
சர்வதேச தரத்துக்கு இணையாக நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளையில், ஏழ்மையைக் காரணம் காட்டி மருத்துவ சிகிச்சை யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, பொது சுகாதாரத் துறையை மேம்படுத்த இந்த ஐந்தாண்டு திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
இந்திய மருத்துவத்துறையில் தேவையான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை மேம்படுத்தவும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications