பொங்கல் போன்று நம் மனதில் நல்லெண்ணங்கள் பொங்கட்டும்: ஜெயலலிதா வாழ்த்து

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி இறைவனை வணங்கி அனைவரும் ஒன்று பட்டு, வேற்றுமைகளை மறந்து உள்ளம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும்.
அச்சமின்மை, மனத்தூய்மை, உண்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புதுப் பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும். பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப்பண்புள்ளவர்கள் ஆவார்கள்.
இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட பல்வேறு நலத்திட்டங்கள் எனது தலைமையிலான தமிழக அரசால் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழர் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ இறைவனை வேண்டி என்னுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications