முல்லைப் பெரியாறு: பிரதமர் முன்னிலையில் ஜெ., சாண்டி பேசித் தீர்க்க வேண்டும்-வயலார் ரவி
ஸ்ரீபெரும்புதூர்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் தேசிய அளவிலான இளைஞர்கள் மற்றும் இடம் பெயர்தல் குறித்த 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் ஏஜென்சியால் ஏற்படும் பிரச்சனைகள், பணி பாதுகாப்பில்லாமை, நிரந்தர வேலையின்மை ஆகியவை தான் இதற்கு காரணமாகும்.
இந்திய அளவில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புகின்றனர். முன்பு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து 4 லட்சமாகியுள்ளது. அண்மை காலமாக வெளிநாடுகளுக்கு படிக்கச் சென்ற மாணவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வந்தன. விசாரணையில் மாணவர்கள் விசாவில் வேலைக்கு சென்றவர்களால் தான் இந்த அவல நிலை என்று தெரிய வந்தது.
இன்றைய தேதியில் தமிழகத்தில் அனைவராலும் பேசப்படுவது முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தான். இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications