புதுச்சேரியில் பல லட்சம் கள்ளநோட்டு: ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி கைது

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளதாக தெரியவந்திருப்பதால் உஷார்' நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் வியாழக்கிழமையன்று கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய், 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது கூட்டாளிகளான ஜமேதார் ஷேக், ஷபீக், அப்துல்கரீம், மிட்டு ஷேக், முகமது இஸ்மாயில் ஆகிய 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னையில் விசாரணை

கைது செய்யப்பட்ட முகமது இஸ்மாயில் ஷேக், சென்னை சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது செல்போனை வைத்தும் அவருக்கு யார்-யாருடன் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது. இந்த கும்பலைச் சேர்ந்த அனைவரும் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் ஏஜெண்டுகள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஊடுருவியுள்ள கள்ள நோட்டு கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையைச் சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

டாஸ்மாக் கடைகள்

இந்தநிலையில், கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த 3 பேரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் கள்ள நோட்டு கும்பல் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்

தமிழ்நாட்டிலும் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பிற தென் மாநிலங்களிலும் தொழிலாளர்கள் போல் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பது விசாரணையின் மூலம் தெரியவந்தது.

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான கள்ள ரூபாய் நோட்டுகள் குறிப்பாக 500 ரூபாய், 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் தமிழ்நாடு முழுவதும் புழக்கத்தில் விடப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. கள்ள நோட்டுகள் பெரும்பாலும் டாஸ்மாக் கடைகள் மூலம்தான் புழக்கத்தில் விடப்படுவதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலும் டாஸ் மார்க் கடைகளில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்த சென்ற பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின.

பொதுமக்கள் உஷார்

வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பல இடங்களில் வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் போர்வையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களும் ஊடுருவி விடுகிறார்கள். இதனால் கள்ள நோட்டு கும்பலை பிடிக்க போலீசார் உஷார்' படுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் மற்ற மாநிலங்களிலும் போலீசார் உஷார்' படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

கள்ள நோட்டு புழக்கத்தை தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கியில் செலுத்தும் பணத்தை, நன்கு சோதித்தபிறகே வாங்க வேண்டும் என்று வங்கி கேஷியர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மேலும், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் செலுத்தும் பணத்தையும், நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க பொதுமக்களும் உஷார்' படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+