சென்னை எழிலக கட்டடட வளாகத்தில் புதிய கட்டடம்: ஆராய நிபுணர் குழு- தமிழக அரசு நியமனம்
சென்னை : தீ விபத்தில் சேதமடைந்த சென்னை எழிலக கட்டட வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவது குறித்தும், சேதமடைந்த கட்டடத்தை மீளக் கொண்டு வர முடியுமா என்பது பற்றியும் ஆராய, தமிழக அரசு, நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள எழிலக கட்டடத்தில் கடந்த 16ம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்களின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சமூக நலத்துறை, தொழில் வணிகத்துறை அலுவலகங்கள் புதிய இடத்தில் செயல்பட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தொன்மை வாய்ந்த அரசு கட்டடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்தும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நிபுணர்குழு அமைப்பு
கூட்டத்திற்கு பின்னர் தீ விபத்தில் சேதமடைந்த சென்னை எழிலக கட்டடட வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவது குறித்தும், சேதமடைந்த கட்டடத்தை மீளக் கொண்டு வர முடியுமா என்பது பற்றியும் ஆராய, தமிழக அரசு, நிபுணர் குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிபுணர் குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், பொதுப்பணித் துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) ஆர்.கோபாலகிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை நகர்ப்புற திட்ட அலுவலர் மற்றும் தொன்மைக் குழுமத்தின் தலைவர், சி.பழனிவேலு, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு எழிலக கட்டடம் குறித்த தனது அறிக்கையினை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அனைத்து கட்டடங்களும் ஆய்வு
மேலும் இக்குழு, சென்னை பெருநகரில் உள்ள இதர தொன்மை வாய்ந்த அரசு கட்டடங்களை ஆய்வு செய்து, அவற்றின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறிக்கை ஒன்றினை அளிக்கும்படியும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், இனி வருங்காலத்தில் அரசு கட்டடங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும்பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில் உள்ள தீயணைப்பு கருவிகளை காலமுறைப்படி பரிசோதனை செய்து, அவைகளை தீ விபத்துக்கள் ஏற்படும் சமயம் உபயோகிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அதேபோன்று, மின் சாதனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து இணைப்புகளையும் காலமுறைப்படி பரிசோதித்து, அதில் உள்ள குறைகளை கண்டறிந்து அவைகளை சரிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தீ விபத்தில் சேதமடைந்த சமூகநலத்துறை இயக்குநரகம் மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, 2 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications