மணிப்பூரில் நாளை ஓட்டுப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
இம்பாலா : மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தலை ஒட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூர் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சனிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 17 லட்சத்து 40 ஆயிரத்து 576 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 8 லட்சத்து 58 ஆயிரத்து 340 பேர் ஆண்கள், 8 லட்சத்து 82 ஆயிரத்து 236 பேர் பெண்கள். இதற்காக மாநிலம் முழுவதும் மாநிலம் முழுவதும் 2,357 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
காங்கிரஸ் தவிப்பு
மணிப்பூரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஓக்ராம் இபோபிசிங் இருந்து வருகிறார். ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால் காங்கிரசை எதிர்த்து அங்கு கம்யூனிஸ்டுகள் மற்றும் மாநில கட்சிகள் ஓர் அணியில் திரண்டுள்ளன. பாதீய ஜனதா மட்டும் தனித்து போட்டியிடுகிறது.
சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பிரச்சாரமானது புதன்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. தேர்தலுக்கு தீவிரவாத குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாவண்ணம் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. மாநில அரசுடன் மத்திய உள்துறை அமைச்சகமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மணிப்பூர் மாநிலம்தான் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை சீர்குலைக்க ஏற்கனவே பலமுறை குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 4 மாநில சட்டசபைகளின் பதவி காலம் முடிவடைவதைத் தொடந்து அங்கும் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications