வாழ விடாத வறுமை..இறுதிச் சடங்குகளுக்கு பொருள் வாங்கி வைத்து விட்டு தம்பதி தற்கொலை!
ராமநாதபுரம்: வறுமையை தாங்க முடியாமல் ஒரு தம்பதி ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டது. தங்களது இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான பொருட்களையும் அவர்கள் வாங்கி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியினரை சோகத்தில் மூழ்கடித்தது.
ராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(52). இவரது மனைவி ஜோதி(47). சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார் முருகேசன். இதில் அவரது கால் ஊனமடைந்தது. இதனால் வேலைக்குப் போக முடியவில்லை. வறுமைக்குத் தள்ளப்பட்டது குடும்பம்.
இதையடுத்து வாழப் பிடிக்காத முருகேசன் தற்கொலைக்கு முடிவு செய்தார். நீங்கள் போன பிறகு நான் மட்டும் எப்படி வாழ முடியும், நானும் உங்களுடனேயே வந்து விடுகிறேன் என்று அழுதபடி மனைவி ஜோதி கூற இருவரும் இணைந்து மரணத்தைச் சந்திக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து இருவரும் பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டனர். காலையில் நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
போலீஸுக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். இறப்பதற்கு முன்பு முருகேசன் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், எனக்கு கால் ஊனமானதால் குடும்பத்தை நடத்த முடியவில்லை. ஆகவே தற்கொலை செய்ய முடிவு செய்தேன். நான் இன்றி எனது மனைவியும் வாழ மறுத்துவிட்டார். எனவே நாங்கள் இருவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டோம் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் தற்கொலைக்கு மு்ன்பாகவே, இறுதிச் சடங்குக்குத் தேவையான பொருட்களை முருகேசன் வாங்கி வைத்திருந்தார். அந்தப் பொருட்கள் முருகேசன் தம்பதியின் உடல்களுக்கு அருகே ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பரிதாபத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பெரும் சோகமடைந்தனர்.


Click it and Unblock the Notifications
