சல்யூட் அடிக்காத 'குற்றத்துக்காக' ஏட்டை தரையில் தவழ்ந்து வரச் சொன்ன போலீஸ் அதிகாரி
டெல்லி: பாட்டியாலா நீதிமன்ற வளகத்தில் தமக்கு சல்யூட் வைக்காமல் செல்போனில் பேசிய கான்ஸ்டபிளை தரையில் உருளச் சொன்ன காவல்துறை அதிகாரியின் செயல்பாடு மனிதாபிமானமற்றது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் என்ன?
பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தின் 6வது வாயிலில் பாதுகாப்பு பணியில் கான்ஸ்டபிள் தினேஷ்குமார் கடந்த 8ம் தேதி காலையில் ஈடுபட்டிருந்தார்.
பாதுகாப்பு பணிகளை கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் பி.குருவில்லா பார்வையிட்டபடி வந்தார். குருவில்லா வந்த போது அவருக்கு சல்யூட் வைக்காமல், செல்போனில் தினேஷ் குமார் பேசி கொண்டிருந்தார்.
இதை பார்த்த குருவில்லா ஆத்திரம் அடைந்தார். திணேஷ்குமாரின் சட்டையிலிருந்து பேட்ஜையும் செல்போனையும் பறித்து கொண்டார். அத்துடன் அனைவரது முன்னிலையிலும் தரையில் உருளும்படி தண்டனை விதித்தார்.
இந்த சம்பவம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்காலிக தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி, நீதிபதி ராஜிவ் சகாய் எண்ட்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்தது.
சம்பவம் பற்றி வழக்கறிஞர் ஆர்.கே.சகானி நீதிமன்றத்தில் கூறியதாவது:
நீதிமன்ற வளாகத்தில் கான்ஸ்டபிளை தரக்குறைவாக நடத்தியதன் மூலம் நீதிமன்றத்தையே குருவில்லா அவமதித்துள்ளார். சீருடையில் இல்லாத அதிகாரி, தனக்கு வணக்கம் செலுத்தவில்லை என்பதற்காக இந்த கடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்‘ என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் கேட்டு போலீஸ் கமிஷனருக்கும் கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் குருவில்லாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் நடந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தையும் 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தினேஷ் குமார், செல்போனில் பேசியது தவறு. உயர் அதிகாரி வரும் போது அவருக்கு மரியாதை செலுத்தாமல் இருந்தது அதைவிட தவறு என்று கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீபதிகள், காவல்துறை அதிகாரியின் செயல் மனிதாபிமானமற்றதாக இருந்தாலும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் வராது என்றும் தெரிவித்தனர். மேலும் எதிர்காலத்தில் காவல்துறை அதிகாரிகள் இதுபோல் செயல்படக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்து வி்டடு விட்டனர்.
காவல்துறையினரின் மனித உரிமை மீறலிலிருந்து காவல்துறையினரே கூட தப்பிக்க முடியாது போல...!












Click it and Unblock the Notifications