ரூ.1 கோடி பறிமுதல்: பிரதீபா பாட்டில் மகனுக்கு நோட்டீஸ்
அமராவதி: அமராவதி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக குடியரசுத தலைவர் பிரதீபா பாட்டீலின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராவ்சாஹேப் ஷெகாவத் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை வரும் 21ம் தேதி நடக்கிறது.
மும்பை மாநகராட்சி தேர்தல் நேற்று நடந்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு அமராவதி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நாக்பூரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த பணம் வறுமையில் வாடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அது ஒன்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் குடியரசுத தலைவர் பிரதீபா பாட்டீலின் மகனும், அமராவதி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராவ்சாஹேப் ஷெகாவத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வறுமையில் வாடும் கட்சி வேட்பாளர்கள் 87 பேருக்கு உதவ காங்கிரஸ் கமிட்டியிடம் நிதி கேட்டேன். அந்த 87 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் வழங்க ரூ.1 கோடி நிதியை எனக்கு அனுப்பி வைத்தனர் என்றார்.
ஆனால் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கவே எடுத்துச் செல்லப்பட்டதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ப்ரித்விராஜ் சவான் மற்றும் காங்கிரஸார் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர் என்று அது மேலும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அமராவதி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஷெகாவத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வரும் 21ம் தேதி் விசாரணை நடத்தப்படவிருக்கின்றது.












Click it and Unblock the Notifications