தீவிரவாத தடுப்பு மையத்தை எதிர்ப்பது ஏன்? - மன்மோகனுக்கு ஜெ. கடிதம்
சென்னை: மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட பல உரிமைகளை ரத்து செய்யும் போக்கை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத தேசிய தடுப்பு மையம் இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடித விவரம்:
இந்திய இறையாண்மையை பாதுகாப்பதற்கும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஆதரவு அளித்து வருவது தங்களுக்கு நன்றாக தெரியும்.
எந்தச் சூழ்நிலையிலும் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. இந்த நிலையில், தேசிய தீவிரவாத தடுப்பு மையம்' (நேஷனல் கவுண்ட்டர் டெரரிசம் சென்டர்) அமைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி அனுப்பிய கடிதத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தடுப்பு மையத்தின் அதிகாரங்கள்
அந்தக் கடிதத்தில் கீழ்க்கண்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
- சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவு 2 (இ)-ன்கீழ் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் இயக்குனர்தான் தலைமை அதிகாரியாக செயல்படுவார்.
- அந்த மையத்தின் செயல்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு, சோதனையிடும் அதிகாரமும், கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்படுகிறது.
- மாநிலங்களுக்கு இடையே நுண்ணறிவு ஒத்துழைப்புக் குழுக்களை அமைக்கவும் இந்த மையத்திற்கு அதிகாரம் உள்ளது.
- இந்த மையம், தனது கடமையை ஆற்றும் வகையில், ஆவணங்கள், அறிக்கைகள், கணினி சார்ந்த குற்றம் உள்பட தேவையான அனைத்து தகவல்களை திரட்டவும், புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து எந்த வகையிலான தகவல்களை சேகரிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது.
- வழக்கின் தன்மைக்கேற்ப ரகசியம் காக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகள் தகவல்களை கொடுக்கலாம்.
மாநில உரிமைகளுக்கு ஆபத்து
தேசிய தீவிரவாத தடுப்பு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு அதிகாரங்கள், பொறுப்பற்ற முறையில் மாநிலங்களிடம் உள்ள அதிகாரத்தை ரத்து செய்யும் போக்கினை உருவாக்கக்கூடும்.
தற்போது மத்திய உள்துறை இணை செயலருக்கும், மாநில உள்துறை செயலாளருக்கும் வழங்கப்பட்டு உள்ள கைது மற்றும் பறிமுதல் செய்யும் அதிகாரம், மேற்கண்ட மையத்தின் புலனாய்வு அதிகாரிகளுக்கு போய்விடும் நிலை ஏற்படும்.
இது கடும் ஆட்சேபத்திற்கு உரியது. தீவிரவாதத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு பதிலாக தனிப்பட்ட காரணங்களுக்காக அதிகாரம் தவறாக பயன்படுத்தக்கூடும்.
மேலும், மாநிலங்களுக்கு இடையே நுண்ணறìவு ஒத்துழைப்புக் குழுக்களை அமைப்பது மாநிலங்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை பறித்துவிடும்.
தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் எனது அரசு எப்போதும் கடும் நடவடிக்கை எடுத்து வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
நுண்ணறிவு தகவல்களை சேகரித்தல், அவற்றை பரிமாறிக் கொள்தல், எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது, நவீன ஆயுதங்களுடன் பயிற்சி அளித்தல் ஆகியவற்றால்தான் தீவிரவாதத்தை திறம்பட எதிர்கொள்ள முடியும் என்பதை எனது அனுபவத்தில் இருந்து உறுதியாக சொல்ல முடியும்.
தன்னிச்சையான அமைச்சர்கள்
நுண்ணறிவு தகவல்களை சேகரிக்கவும், பரிமாறிக் கொள்ளவும் வெறுமனே இதுபோன்ற தீவிரவாத தடுப்பு மையங்களை ஏற்படுத்துவதால் தீவிரவாதத்தை தடுத்துவிட முடியாது.
அதனால்தான், வரும் மார்ச் 1-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு உள்ள தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படக்கூடிய குறிப்பிட்ட சில மத்திய அமைச்சர்களின் செயல்களுக்கு தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ள இதர மாநில முதலமைச்சர்களின் உணர்வுகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
நியாயமற்ற போக்கு
பொதுஅமைதி மற்றும் போலீஸ் ஆகிய விஷயங்கள் மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளன. அப்படி இருக்கும்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பது நியாயமில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மாநிலங்களையும் கலந்து ஆலோசிக்கக்கூடாதா?
எனவே, நான் தெரிவித்த கருத்துகளை மனதில் கொண்டு, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
8 முதல்வர்கள் எதிர்ப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி உட்பட 8 மாநில முதல்வர்கள் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய இத்தடுப்பு மையத்தை கைவிட வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.












Click it and Unblock the Notifications