உண்ணாவிரதம் இருக்க முயன்ற ராணுவ வீரரின் மனைவியை இழுத்துச் சென்ற போலீஸ்!
கரூர்: குடிநீர் இணைப்பு கேட்டு கரூர் நகராட்சி முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற ராணுவ வீரரின் மனைவி மற்றும் குழந்தைகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கரூர் மாவட்டம் சணப்பிரட்டியை அடுத்த தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. அவர் இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் தற்போது பெங்களூரில் பணியாற்றி வருகின்றார். அவரது மனைவி ஷர்மிளா(35). அவர்களுக்கு தீட்சிகா(12) லீபிகா(8) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஷர்மிளா தன்னுடைய மகள்களுடன் நேற்று கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். தனது வீட்டுக்கு புதிய குடிநீர் இணைப்பு கேட்டு மனு கொடுத்து பல மாதங்களாகியும் இணைப்பு வழங்காததை கண்டித்து சாகும்வரை உண்ணாவிரத்தை துவங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த கரூர் எஸ்.ஐ. ஜெயராணி தலைமையிலான பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷர்மிளாவையும், அவரது குழந்தைகளையும் உண்ணாவிரத்தை கைவிடுமாறு கூறினர். ஆனால் இதற்கு ஷர்மிளா மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆவேசமடைந்த பெண் போலீசார் ஷர்மிளாவையும், அவரது குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கரூர் காவல் நிலையம் சென்றனர். அங்கு ஷர்மிளாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறியதாவது,
ஷர்மிளா வீட்டுக்கு கரூர் நகராட்சி தரப்பில் குடிநீர் இணைப்பு தர தயாராக உள்ளோம். ஆனால் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரத்தை தாசில்தார் மூலம் தீர்க்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications