சாலை விபத்துகளில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு
சென்னை: சாலை விபத்துகளில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா முத்தனேந்தல் கிராமத்தில் மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் கடந்த 19ம் தேதி திருப்பூர் சென்று கொண்டிருந்த அரசு பஸ், முத்தனேந்தல் பஸ் நிறுத்தம் அருகே பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த காலிதின் மனைவி ரம்ஜான் கனி, சமயமுத்துவின் மகன் பெரியசாமி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயும், படுகாயமடைந்த முருகேசனின் மகன் தங்கமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் பலியாகினர்.
தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டி கிராமத்தில் கடந்த 21ம் தேதி தேனியில் இருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப்பும், கம்பத்தில் இருந்து தேனி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதின.
இதில் ஜீப்பில் பயணித்த வடக்குப்பட்டியைச் சேர்ந்த அங்கையனின் மனைவி சுதா, சந்திரனின் மனைவி மாலதி, ஒச்சாத்தேவரின் மகன் சந்திரன், தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணனின் மகன் பகத்சிங் ஆகிய 4 பேர் பலியாகினர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
மேற்கண்ட சாலை விபத்துகளில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா, முத்தனேந்தல் கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதையும், தேனி மாவட்டம், பழனிச் செட்டிப்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதையும் அறிந்து வருத்தம் அடைந்தேன்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், சிவகங்கை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேற்கண்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000மும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000மும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications