கூடங்குளத்தில் ஏடிஜிபி ஜார்ஜ் திடீர் ஆய்வு- போராட்டத்தை முடிக்கத் தயாராகிறது போலீஸ்?

கூடுதல் டிஜிபி ஜார்ஜ் வருகை பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எதற்காக இந்த திடீர் ஆய்வு என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் முன்னோட்டமாகவே ஜார்ஜின் வருகை பார்க்கப்படுகிறது.
மேலும் ஜார்ஜ் வருகைக்கு மேலும் பல அர்த்தங்களும் கற்பிக்கப்படுகின்றன. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவைக் கடுமையாக கண்டித்து ஒட்டுமொத்த தேனி மாவட்டமும் வீறு கொண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. கம்பத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடி கேரளாவை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதையடுத்து முதலில் தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் போய் தங்களது உரிமைகளைக் காக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்களை கடுமையாக சாடி திட்டி தடியடி நடத்த உத்தரவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து கூடுதல் டிஜிபி ஜார்ஜ் அனுப்பப்பட்டார். அவர் போன பின்னர் போலீஸாரின் தடியடி நடவடிக்கைகள் அதிகரித்தன. போராட்டமும் போலீஸாரால் ஒடுக்கப்பட்டது. கேரளாவுக்கு எதிராக யாரும் பேச முடியாத அளவுக்கு போலீஸாரின் நடவடிக்கைகள் கடுமையாகின.
இதையடுத்து கூடுதல் டிபிஜி ஜார்ஜுக்குக எதிராக போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜார்ஜை கடுமையாக கண்டித்தன. தான் சார்ந்த மாநிலத்திற்கு ஆதரவாக ஜார்ஜ் செயல்படுவதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு ஜார்ஜை அங்கிருந்து அகற்றவில்லை. போராட்டத்தை முற்றாக முடித்து விட்டுத்தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ஜார்ஜ்.
இதேபோல முன்பு அதிமுக ஆட்சியின்போது நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போலீஸ் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் ஜார்ஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையப் பகுதிகளுக்கு ஜார்ஜ் திடீரென வந்து ஆய்வு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அணு மின் நிலையம், வைராதிகிணறு, கூத்தங்குளி, தாமஸ் மண்டபம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளிலும் ஆய்வு நடைபெற்றது.
நேற்று முதல்வர் ஜெயலலிதாவை அஏணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு சந்தித்துப் பேசியது. அப்போது எந்தவிதமான உத்தரவாதத்தையும் முதல்வர் ஜெயலலிதா தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உதயக்குமார் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிகிறது. அவர்கள் தங்களது போராட்டங்களை தொடரப் போவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான் கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கூடங்குளம் வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications