கருப்பசாமி ஸ்டைலில் 'விழுந்து விழுந்து' ஓட்டு கேட்கும் தேமுதிக வேட்பாளர்!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் வாக்காளர்களைக் கவர என்ன வழியெல்லாம் உள்ள என்பதை ரூம் போட்டு யோசித்து அமலாக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் வாக்காளர்கள் தங்களை நாடி வரும் வேட்பாளர்கள் செய்யும் வேடிக்கை வினோதங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.
தேர்தல் என்றாலே காமெடிக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் என்னென்னவோ வித்தைகளையெல்லாம் செய்வார்கள். காலில் விழுவார்கள், மூதாட்டிகளைக் கட்டிப் பிடித்து போஸ் கொடுப்பார்கள், இன்னும் பல இத்யாதிகளைச் செய்வார்கள்.
சங்கரன்கோவில் தொகுதியில் நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த மறைந்த கருப்பசாமி, தேர்தல் பிரசாரத்திற்குப் போகும் போது தான் சந்திக்கும் வாக்காளர்கள் காலில் விழுவதை ஒரு மரபாகவே வைத்திருந்தார். கடந்த தேர்தலின்போது கூட காலில் விழுந்து விழுந்துதான் வாக்கு சேகரித்தார் கருப்பசாமி. அதன் பிறகு ஜெயித்து தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லப் போனபோதும் காலில் விழுந்து நன்றி சொல்லி அனைவரையும் நெளிய வைத்தார்.
இந்த பாணியை தற்போது திமுக, தேமுதிக வேட்பாளர்கள் காப்பியடிக்க ஆரம்பித்துள்ளனர். திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமாரும் தனது பிரசாரத்தின்போது வயதானவர்களைப் பார்த்தால் பொசுக்கென காலில் விழுந்து ஓட்டுப் போட்ருங்க என்கிறார். ஆனால் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார்தான், கருப்பசாமியை முழுமையாக பாலோ செய்கிறாராம். யாரைப் பார்த்தாலும் காலில் விழும் அவர் மறக்காக முரசு சின்னத்திற்கே ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொள்கிறாராம்.
ஆனால் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி மட்டும் இதுவரை கருப்பசாமியை காப்பியடிக்காமல் ஓட்டு சேகரித்து வருகிறார். போகிற போக்கைப் பார்த்தால் அவரும் கூட காலில் விழும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
காலில் விழும் எந்த வேட்பாளருக்கு வாக்காளர்களின் ஓட்டு விழப் போகிறதோ...!












Click it and Unblock the Notifications