பெங்களூர் மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து மாணவன் தற்கொலை: டிவியைப் பார்த்து தெரிந்து கொண்ட பெற்றோர்
பெங்களூர்: பெங்களூர் நம்ம மெட்ரோ ரயிலின் முன்பு பாய்ந்து மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து நடக்கும் முதல் தற்கொலை ஆகும்.
பெங்களூர் நம்ம மெட்ரோ ரயில் சேவை துவங்கி 4 மாதங்கள் ஆகின்றன. இந்த சேவை துவங்கியதில் இருந்து நேற்று வரை யாரும் மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் மாணவர் ஒருவர் முதல் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர் ஜெயா நகர் முதல் பிளாக்கில் வசிப்பவர் தொழிலதிபர் எஸ்.வி.சத்திய நாராயணன். இவரது மகன் எஸ்.விஷ்ணு சரண்(16). செயின்ட் ஜோசப்ஸ் பியூ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலையில் இந்திரா நகரில் டியூஷன் சென்டருக்கு விஷ்ணு சரண் சென்றார்.
அதன்பிறகு வீட்டிற்கு போன் செய்த அவர் 30 நிமிடங்களில் வந்துவிடுவதாக கூறி இருந்தார்.இந்த நிலையில் நேற்று மாலை 8.35 மணிக்கு மெட்ரோ ரயில் ஒன்று பயப்பனஹல்லியில் இருந்து எம்.ஜி.ரோடு ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது எம்.ஜி.ரோடு ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் பயணிகளுடன் விஷ்ணு சரணும் ரயிலுக்காக காத்திருந்தார். ரயில் தன்னை நெருங்கிய நேரத்தில், பிளாட்பாரத்தில் நின்ற அவர் திடீரென ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயிலில் சிக்கிய அவரது உடல் அரை மணி நேரத்திற்கு பிறகு ரயில்வே பணியாளர்களால் மீட்கப்பட்டது.
அவரது உடையில் இருந்த கல்லூரி அடையாள அட்டை மூலம் அவரைப் பற்றிய தகவல் தெரிய வந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தையடுத்து நேற்று மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
தற்கொலை சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது,
தற்கொலை செய்து கொண்ட மாணவன் நீல நிறத்திலான ஷாட்ஸ், டி-சர்ட் மற்றும் செருப்பு அணிந்திருந்தார். எனக்கு அருகில் நின்றபடி ரயிலுக்காக காத்திருந்தார். ரயில் பிளாட்பாரத்தை நெருங்கிய போது திடீரென ரயில் முன்பு குதித்துவிட்டார். அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை என்றார்.
தற்கொலை செய்து கொள்ளும் முன் தாயாரிடம் பேசிய விஷ்ணு சரண் எம்.ஜி.ரோட்டில் புத்தகம் வாங்க செல்வதாகவும் 30 நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டிவியில் செய்தியைப் பார்த்து தான் தங்கள் மகன் விஷ்ணு சரண் தற்கொலை செய்து கொண்டதை பெற்றோர் தெரிந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications