விமானமே மோதினாலும் கூடங்குளம் அணு உலைக்கு ஒன்றும் ஆகாது- நாராயணசாமி

Subscribe to Oneindia Tamil

கோவை: கூடங்குளம் அணு மின் உலை மிகவும் வலுவானது, பாதுகாப்பானது. ஒரு விமானமே வந்து மோதினாலும் கூட அணு உலைக்கு ஒன்றும் ஆகாது, நொறுங்கிப் போகாது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார்.

கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில்,

இங்கு கூடியுள்ள தொழில் முனைவோர் மத்தியில் கூடங்குளம் அணு உலை பற்றி பேச வேண்டும் என்றுதான் கோவை வந்தேன். காரணம் அணு உலை ஆதரவாக கோவையில் தொடங்கிய முழக்கம் இன்று அணு உலை எதிர்ப்பாளர்களை பொதுக்கூட்டம் நடத்த விடாத அளவுக்கு மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளார்கள்.

எனக்கு அணு உலை பற்றி எதுவும் தெரியாது. ஆனாலும் பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாலும், பல்வேறு நாடுகளுக்கு சென்று, அணுவிஞ்ஞானிகளை சந்தித்து வருவதாலும் அணுஉலை பற்றி தெரிந்து வைத்துள்ளேன்.

அணு உலை மூலம் பிரான்ஸ் நாட்டில் 74 சதவீதம், ஜப்பானில் 26 சதவீதம், ரஷ்யாவில் 20 சதவீதம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சீனாவில் 30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அணு உலை மூலம் தயாரிக்கப்படுகிறது. மேலும் பாகிஸ்தானுக்கு சீனா 2 அணு உலைகளை கட்டிக்கொடுத்து அதன் மூலம் பாகிஸ்தான் 1400 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கிறது. மேலும் அங்கு 2 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மொத்தம் 20 அணுஉலைகள் உள்ளன. இதில் 19 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. ஒரு அணு உலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அணு உலை மூலம் இந்தியாவில் 3 சதவீத மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள 3-ஆம் தலைமுறை அணு உலை மிகவும் பாதுகாப்பானது. இந்த அணு உலை கட்டுவதற்கு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஒப்பந்தம் போடப்பட்டது.

கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள 2 அணு உலைகளில் ஒரு அணு உலையில் 99 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அந்த உலையில் யுரேனியம் நிரப்பினால் 15 நாட்களில் மின்சாரம் கிடைக்கும். 2-வது அணு உலையில் 95 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இந்த உலையில் 2 மாதத்தில் உற்பத்தியை தொடங்கலாம்.

அணு உலை கட்டுவதற்கு இந்திய அணுமின் கழகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, கடல்சார் உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பு, இந்திய தரகட்டுமான அமைப்பு, இயந்திரம் அமைப்பு உள்பட 7 அமைப்புகளிடம் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் ஹாட்ரோலர் இயங்கும்போது மிகப்பெரிய இடியோசை போன்ற பயங்கர சத்தம் வரும்.

இதை வைத்து கதிர் வீச்சு வரும் என்று அணு விஞ்ஞானம் பற்றி தெரியாத சிலர் மக்களை திசை திருப்பி விட்டுள்ளனர்.

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அமைத்த நிபுணர்கள் குழு, தங்களது அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது என்று மிக தெளிவாக கூறிவிட்டது. இந்தியர்கள் அனைவராலும் மதிக்கப்படுகின்ற விஞ்ஞானி அப்துல் கலாமும், தெளிவான பதிலை தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுஉலை மீது அதிகவேகமாக வரும் விமானத்தை விட்டு மோதவிட்டாலும், விமானம்தான் நொறுங்குமே தவிர அணுஉலை வெடிக்காது. கதிர்வீச்சு என்பது மிகவும் குறைவுதான். கூடங்குளம் பகுதியில் 2 ரிக்டர் அளவுக்கு மேல் பூகம்பம் வராது. மேலும் சுனாமி வந்தாலும் அணுஉலையை அசைக்க கூடமுடியாது.

அணு உலைக்கு 7 விதமாக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அணுஉலையை குளிர்விக்க தண்ணீர் செலுத்தவில்லை என்றால்தான் அணுஉலை வெடிக்கும். அதுபோல் ஆபத்து வந்தாலும் அங்குள்ள துவாரம் வழியாக ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை செலுத்தி தண்ணீர் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை ரஷ்யா நமக்கு தந்துள்ளது.

ஜனநாயகம் என்ற போர்வையில் இந்தியாவின் வளர்ச்சியை கெடுக்க சில கூட்டம் செயல்படுகிறது. அவர்களது கனவு பலிக்காது. இந்தியாவில் எந்த பொருளை உற்பத்தி செய்தாலும் அதை வாங்கும் சக்தியும் இந்திய மக்களுக்கு உள்ளது. கூடங்குளம் அணுஉலை மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும், மேலும் மின்சாரம் தேவை என்றால் நான் பிரதமரிடம் பேசி வாங்கித்தர தயாராக உள்ளேன்.

ஆந்திரா மற்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் யுரேனியம் அதிக அளவு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து யுரேனியம் வாங்கினால் நிறைய கட்டுப்பாடுகளை அந்த நாடு விதிக்கும். நம்மிடம் யுரேனியம் இருப்பதால் இனி நமக்கு பிரச்சினை இல்லை. எனவே கூடங்குளம் அணுஉலை இயங்க தமிழக அரசு ஒத்துழைப்பு தரும் என நம்புகிறேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+